மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லிக் காற்பந்தாட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியும் ஆர்சனலும் மோதிய ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
தோல்வியின் விளிம்பில் இருந்த சிட்டியைக் காப்பாற்றினார் ஜான் ஸ்டோன்ஸ். ஆட்டம் நிறைவடையவிருந்த நிலையில் கூடுதல் நேரத்தின் எட்டாவது நிமிடத்தில் ஸ்டோன்ஸ் கோல் போட்டார்.
ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் சிட்டியை முன்னுக்கு அனுப்பினார். அந்த கோல், இந்தப் பருவத்தில் ஹாலண்ட் போட்ட 10வது கோல் மட்டுமின்றி சிட்டிக்கு அவர் போட்டுள்ள 100வதும் ஆகும்.
பின்னர் 22வது நிமிடத்தில் மிகவும் அபாரமான கோலைப் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தினார் ஆர்சனலின் ரிக்கார்டோ காலஃபியோரி. முற்பாதியாட்டத்தின் கூடுதல் நேரத்தில் கேப்ரியெல் ஆர்சனலை முன்னுக்கு அனுப்பினார்.
எனினும், முற்பாதியாட்டத்தின் இறுதியில் அக்குழுவின் லியாண்ட்ரோ ட்ரொசார்ட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிற்பாதியாட்டம் முழுவதும் ஒரு விளையாட்டாளர் குறைவாக இருந்தாலும் மனவுறுதியுடன் விளையாடி சிட்டியை கோல் போட விடாமல் தடுத்தது ஆர்சனல்.
விட்டுக்கொடுக்காமல் போராடிய சிட்டி ஆட்டம் நிறைவடையவிருந்த வேளையில் தோல்வியைத் தவிர்த்துக்கொண்டது. அதேவேளை, 10 விளையாட்டாளர்களுடன் கிட்டத்தட்ட வெற்றியைத் தட்டிச்சென்ற ஆர்சனல், வர்ணனையாளர் உள்ளிட்டோரின் பாராட்டுகளைப் பெற்றது.


