பதக்க வேட்டையில் மும்முரம் காட்டும் போட்டியாளர்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026

பதக்க வேட்டையில் மும்முரம் காட்டும் போட்டியாளர்கள்

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: சாவ்பாவ்

20 Sep 2026 - 6:44 pm

2 mins read

நகோயா: ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் முதல் பதக்கத்தை வூஷு தற்காப்புக் கலை வீராங்கனை ஸீன் லா ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 20) வென்றார்.

பெண்களுக்கான தைச்சிஜியேன்-தைச்சிகுவான் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 20 வயது லா, தைச்சிகுவான் பிரிவில் 9.720 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற தைச்சிஜியேன் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 19.443 புள்ளிகள் பெற்றுப் பதக்க மேடையை உறுதிசெய்தார். புருணையின் பஸ்மா லச்கரும் 19.443 புள்ளிகள் பெற்றதால், இருவரும் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான 1,500 மீட்டர் எதேச்சைப் பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் கோ சின் ஹுவீ வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சிங்கப்பூரின் கலப்புத் தற்காப்புக் கலை வீராங்கனை டிஃபனி டியோ அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், இப்போட்டிப் பிரிவில் சிங்கப்பூருக்கு முதல் ஆசிய விளையாட்டுப் பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.

பெண்களுக்கான பாரம்பரிய 60 கிலோ எடைப் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், 36 வயது டிஃபனி டியோ ஈரானிய வீராங்கனையைத் தோற்கடித்தார். தங்கப் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ள இவர், திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நடைபெறவுள்ள அரையிறுதியில் இந்தியாவின் சுசிக்கா தரியாலை எதிர்கொள்கிறார்.

சுசிக்கா காலிறுதியில் மங்கோலிய வீராங்கனையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதற்கிடையே ஜப்பானில் நடைபெறும் இவ்வாண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை ஆண்களுக்கான தனிநபர் ‘டிரையத்லான்’ போட்டியில் ஜப்பானின் தகுமி ஹோஜோ தட்டிச் சென்றார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றது.

பெண்களுக்கான 10 மீட்டர் ‘ஏர் ரைஃபில்’ குழுப் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவன், சோனம் மஸ்கார், விதார்சா வினோத் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்தியாவுக்குக் கிடைத்துள்ள முதல் பதக்கம் இது. இதில் சீனா தங்கப் பதக்கம் வென்றது. போட்டியை ஏற்று நடத்தும் ஜப்பான் வெண்கலம் வென்றது.

தனிநபர் 10 மீட்டர் ‘ஏர் ரைஃபில்’ இறுதிப்போட்டியில் இளவேனில் வளரிவன் இரண்டாம் இடம்பிடித்து, ஒரே நாளில் தமது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

மகளிர் ஹாக்கியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 19-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இதில் தீபிகா ஷெராவத் எட்டு கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்ளாதேஷை 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

குறிப்புச் சொற்கள்