கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தித் தங்கம் வென்றது இந்தியா

கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தித் தங்கம் வென்றது இந்தியா

படம்: ராய்ட்டர்ஸ்

03 Oct 2026 - 4:33 pm

1 mins read

நகோயா: ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானைத் தோற்கடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

சனிக்கிழமை (அக்டோபர் 3) நடந்த அந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதலில் பந்தடித்து, 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைக் குவித்தது. தொடக்கப் பந்தடிப்பாளர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 61 ஓட்டங்களையும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 51 ஓட்டங்களையும் விளாசினர்.

பெரிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 96 ஓட்டங்களை அடித்தார். ஆயினும், அவ்வணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை மட்டும் எடுத்து, 19 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணியிடம் மண்ணைக் கவ்வியது.

இந்திய அணித் தரப்பில் அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே ஆகிய மூவரும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று சாதித்தது.

முன்னதாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 147 ஓட்ட வித்தியாசத்தில் வென்று, தங்கத்தைத் தனதாக்கியது.

குறிப்புச் சொற்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்கிரிக்கெட்இந்தியாபாகிஸ்தான்தங்கம்