பார்சிலோனா: காற்பந்து வரலாற்றிலேயே மிகச் சிறந்த அனைத்துலகப் பயணங்களில் ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போர்ச்சுகல் தேசிய குழுவிலிருந்து தாம் ஓய்வு பெறவிருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ வியாழக்கிழமை (நவம்பர் 5) சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
நவம்பர் மாத அனைத்துலக ஆட்டங்களுக்குப் பிறகு தமது எண் 7 சட்டையைத் திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக அந்த 41 வயது நட்சத்திரக் காற்பந்தாட்டக்காரர் தெரிவித்தார்.
யூரோ 2016ல் போர்ச்சுகல் அணி தனது முதல் முக்கியக் கிண்ணத்தை வென்றபோது அதற்குத் தலைவராக இருந்தார் ரொனால்டோ. அதன் பிறகு, 2019, 2025ஆம் ஆண்டுகளுக்கான ‘நேஷன்ஸ் லீக்’ போட்டிகளிலும் அவ்வணி வெல்வதற்கு அவர் உதவினார்.
“இது ஒரு சுலபமான முடிவு அல்ல. ஏனெனில் சில முடிவுகள் மூளையால் மட்டும் எடுக்கப்படுவதில்லை, அவை இதயத்தாலும் எடுக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.
தேசிய அணியுடனான தமது 23 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தில், தம்முடன் இணைந்து பணியாற்றிய குடும்பத்தினர், போர்ச்சுகல் மக்கள், சக ஆட்டக்காரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு ரொனால்டோ தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
போர்ச்சுகல் அணிக்காக 234 ஆட்டங்களில் களமிறங்கியுள்ள ரொனால்டோ, 146 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம், அனைத்துலக அளவில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வீரர், அதிக கோல்களை அடித்த வீரர் என்ற இரு சாதனைகளையும் அவர் தம் வசம் வைத்துள்ளார்.
