குத்துச்சண்டைக்குத் தயாராகும் தனி‌‌‌ஷா

2 mins read
9af945a1-e0ff-458e-bfce-55eb193ab439
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் களமிறங்குகிறார் தனி‌‌‌ஷா மதியழகன். இவ்வாண்டு தொடக்கத்தில் தேசிய குத்துச்சண்டைப் போட்டியின் 48 கிலோ பிரிவுக்கான இறுதிச் சுற்றில் வெற்றிபெற்றபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2019ல் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற தேசியக் குத்துச்சண்டை வீரர் தனி‌‌‌ஷா, 28, காலிறுதிச் சுற்றுவரை முன்னேறினார்.

ஆறாண்டு இடைவேளைக்குப் பின் இவ்வாண்டு போட்டிகளிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் இவர், 48 கிலோகிராம் பிரிவில் போட்டியிடவுள்ளார்.

1976க்குப் பிறகு ஆசிய விளையாட்டுகளுக்குத் தகுதிபெற்ற முதல் சிங்கப்பூர் குத்துச்சண்டை வீரராக 2023ல் சாதனை புரிந்தார் தனிஷா. சிங்கப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்குத் தகுதிபெற்ற முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் இவரே.

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பதக்கம் வெல்வதற்காகவே இவர் முழுநேரமாக வேலைசெய்யும் வாய்ப்பைக் கைவிட்டார்.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (எஸ்ஐடி) நோயைக் கண்டறியும் கதிரியக்கவியலில் (diagnostic radiography) உபகாரச் சம்பளத்துடன் படித்துப் பட்டம்பெற்றபின், உள்ளூர் மருத்துவமனையில் நான்கு ஆண்டு பணியாற்றவேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால், குத்துச்சண்டையில் தன் லட்சியத்தை அடைய முழுநேர மருத்துவமனை வேலை அனுமதிக்காது எனக் கருதி, நான்கு ஆண்டுகளில் பெற்ற $130,000 கல்வியாதரவைத் திரும்பக் கொடுப்பதென இவர் முடிவு செய்தார்.

தற்போது தனிஷா, சடலங்களைப் பதப்படுத்துபவராக தன்னுரிமை அடிப்படையில் (freelance) பணியாற்றுகிறார். வேலைக்கும் விளையாட்டு லட்சியத்துக்கும் இடையே நேரத்தைச் சமமாக ஒதுக்குவது சவாலாக இருந்தாலும் அதைத் திறம்பட இவர் கையாள்கிறார்.

‘ஸ்போர்ட்எஸ்ஜி’ அமைப்பின் ‘ஸ்பெக்ஸ்பொடென்‌ஷியல்’ திட்டத்தில் இவ்வாண்டு தனிஷா இணைக்கப்பட்டார். அதன் ஆதரவுடன் இந்தியாவில் ஒரு வாரமும் ஜப்பானில் இரு வாரங்களும் பயிற்சி முகாம்களுக்கு இவர் சென்றார்.

“குத்துச்சண்டையில் சிறந்து விளங்கும் பல நாடுகள் உள்ளன. போட்டியை நடத்தும் தாய்லாந்து வலுவானது,” என்ற தனிஷா, கடும் போட்டியை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

“கடுமையாகப் பயிற்சி செய்துள்ளோம். கடந்த மூன்று மாதங்களாகப் பல பயிற்சி முகாம்களுக்குச் சென்றுள்ளோம். எங்கள் திறனை நம்பி, சிறந்த முயற்சியை வெளிப்படுத்தும்வரை வெற்றி தோல்வி ஒரு பொருட்டன்று,” என்கிறார் தனிஷா.

குறிப்புச் சொற்கள்