தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றியுடன் தொடங்கிய எம்பாப்பே

2 mins read
d792a389-9bba-49b0-8767-d9cfd3ab70f6
ரியால் மட்ரிட் குழு சார்பில் ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் கிலியன் எம்பாப்பே (நடுவில்). \ - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வார்சா: முன்னணி ஸ்பானியக் காற்பந்துக் குழுவான ரியால் மட்ரிட் உடனான தமது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளார் பிரெஞ்சுக் காற்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே.

போலந்து தலைநகர் வார்சாவில் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நடந்த ஐரோப்பிய சூப்பர் கிண்ணப் போட்டியில் ரியால் குழு 2-0 என்ற கோல் கணக்கில் அடலான்டா குழுவை வீழ்த்தி வாகை சூடியது.

ஜூட் பெலிங்ஹம் ஆட்டத்தின் முதல் கோலை அடித்து ரியால் குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தர, தன் பங்கிற்கு ஒரு கோலடித்து அம்முன்னிலையை இரட்டிப்பாக்கினார் எம்பாப்பே.

“ஆட்டம் தொடங்குமுன், எம்பாப்பே கோலடிப்பாரா மாட்டாரா என்பதுபற்றி நாங்கள் பேசிக்கொள்ளவே இல்லை. அது நடக்கும் என்று எதிர்பார்த்தோம்,” என்று செய்தியாளர்களிடம் சொன்னார் ஆட்டநாயகனான பெலிங்ஹம்.

கடந்த பருவத்தில் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்காக 44 கோல்களை அடித்த எம்பாப்பே, ஏழுமுறை அக்குழு சார்பில் பிரெஞ்சு லீக் பட்டத்தை வென்றுள்ளார்.

ஆயினும், ரியால் சார்பில் வென்ற ஐரோப்பிய சூப்பர் கிண்ணமே ஐரோப்பா கண்ட அளவில் அவருக்கு முதல் கிண்ணம்.

அம்மகிழ்ச்சியில் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்ட எம்பாப்பே, “இது எனக்கு மிகச் சிறந்த இரவு. என்னைப் பொறுத்தமட்டில், மிகச் சிறந்த தருணம்,” என்றார்.

“அதிலும், ரியாலுக்காக விளையாடிய முதல் ஆட்டத்திலேயே கோலடிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. என்னைப் போன்ற தாக்குதல் ஆட்டக்காரருக்கு அது முக்கியம்,” என்றும் அவர் சொன்னார்.

எம்பாப்பேவை வெகுவாகப் பாராட்டிய ரியால் நிர்வாகி கார்லோ அன்சலோட்டி, “எம்பாப்பே மிகவும் சிறப்பாக விளையாடினார். குழுவினருடன் நன்கு இணைந்து செயல்பட்டார்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்