பாரிஸ்: டி20 கிரிக்கெட்டில் 27 பந்துகளில் சதம் விளாசி, புதிய சாதனை படைத்துள்ளார் எஸ்டோனியா நாட்டு ஆட்டக்காரர் சாஹில் சௌகான்.
சைப்ரஸ் அணிக்கெதிராக திங்கட்கிழமையன்று (ஜூன் 17) நடந்த ஆட்டத்தில் 32 வயது சௌகான் இச்சாதனையைப் புரிந்தார்.
முன்னதாக, இவ்வாண்டு பிப்ரவரியில் நமீபியாவின் லாஃப்டி ஈட்டன் 33 பந்துகளில் சதம் விளாசியதே அனைத்துலக டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதம். அதுபோல், 2013 ஐபிஎல் தொடரில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதமடித்திருந்தார்.
இவ்விரு சாதனைகளையுமே முறியடித்துள்ளார் சௌகான்.
மொத்தம் 41 பந்துகளில் 144 ஓட்டங்களைக் குவித்து, அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அத்துடன், 18 சிக்சர்களை விளாசியதன் மூலம் ஒரே டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த பெருமையையும் தேடிக்கொண்டார் அவர்.
சைப்ரசுக்கு எதிரான ஆட்டத்தில் 18 சிக்சர்களை அடித்தார் சௌகான். முன்னதாக, ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஸஸாயும் நியூசிலாந்தின் ஃபின் ஆலனும் ஒரே போட்டியில் 16 சிக்சர்களை விளாசியிருந்தனர்.
சைப்ரசின் எபிஸ்கோப்பியில் இந்த ஆட்டம் நடந்தது. சைப்ரஸ் - எஸ்டோனியா அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது ஆட்டம் இது. இதில், சைப்ரஸ் நிர்ணயித்த 191 ஓட்டங்கள் என்ற இலக்கை 13 ஓவர்களிலேயே எட்டியது எஸ்டோனியா.
தொடர்புடைய செய்திகள்
முதல் ஆட்டத்திலும் எஸ்டோனியாவே வென்றது. அதில் சௌகான் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.