சிங்கப்பூரில் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில், திங்கட்கிழமை (நவம்பர் 9) அதிகாலை 3 மணி அளவில், பிரேசில் காற்பந்து நட்சத்திரம் வினிசியஸ் ஜூனியரைக் காண, 19 வயது இளையர்கள் இருவர் ‘டபிள்யூ சிங்கப்பூர் - செந்தோசா கோவ்’ (W Singapore - Sentosa Cove) ஹோட்டல் வாசலில் காத்திருக்கத் தொடங்கினர்.
கிட்டத்தட்ட எட்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு, காற்பந்து ரசிகர்களான அகில் கான், மேக்ஸ் லாவ் இருவரின் எதிர்பார்ப்பு இறுதியில் நிறைவேறியது.
ரியால் மட்ரிட் முன்கள ஆட்டக்காரரான வினிசியஸ், வேன் ஒன்றிலிருந்து வெளியேறியதும், ரசிகர்கள் “வினி! வினி! வினி!,” என்று உற்சாகத்துடன் குரல் எழுப்பினர்.
கருப்பு நிற டி-சட்டை, தொப்பி, ‘வேன்ஸ்’ காலணிகள் அணிந்து மிக எளிமையான தோற்றத்தில் வந்திறங்கிய அந்த 26 வயது நட்சத்திர ஆட்டக்காரர், தம் வருகைக்காகக் காத்திருந்த கிட்டத்தட்ட 50 ரசிகர்களுடன் நேரம் செலவிட்டார்.
ரியால் மட்ரிட் ஆட்டக்காரரான என்ட்ரிக் நேராக ஹோட்டலுக்குள் நடந்துசென்ற நிலையில், வினிசியஸ் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ரசிகர்களுடன் தம்படங்களை எடுத்துக்கொண்டு நினைவொப்பங்களையும் வழங்கினார்.
தமது ‘லாஸ் பிளாங்கோஸ்’ ரியால் மட்ரிட் சட்டையில் தமக்குப் பிடித்த ஆட்டக்காரரின் கையெழுத்தைப் பெற்ற அகில், எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தார்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவரான அவர், “எனக்கு வினிசியஸ் ஜூனியரின் கையெழுத்து மட்டுமே வேண்டும் என்று நினைத்தேன். அது எனக்குக் கிடைத்துவிட்டது!,” என்று கூறினார்.
தேசிய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ‘மிஸுஹோ புளூ சேலஞ்ச் - த காலாங் காற்பந்துத் தொடரில்’ (Mizuho Blue Challenge – The Kallang Football Series) பங்கேற்பதற்காக பிரேசிலிய அணி நட்சத்திரங்கள் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
இத்தொடரில் அவர்கள் நவம்பர் 14ஆம் தேதி ஜப்பானிய அணியைச் சந்திக்கவிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 17ஆம் தேதி அவர்கள் சிங்கப்பூரின் ‘லயன்ஸ்’ அணியுடன் பொருதவிருக்கின்றனர்.
இதற்கிடையே, ஆர்சனல் அணியின் ஆட்டக்காரர்கள் கேப்ரியல் மகல்ஹேஸ், புரூனோ கிமரேஸ் உள்ளிட்ட ஆட்டக்காரர்களும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 8) இங்கு வந்துசேர்ந்தனர்.
