லண்டன்: இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
அவர் பார்ன்ஸ்லி குழுவுக்காகவும் அனைத்துலக அளவில் 19 வயதுக்கும் உட்பட்டோருக்கான வேல்ஸ் குழுவுக்காகவும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய திடல் ஆட்டக்காரரான விமல், செப்டம்பர் 17ஆம் தேதியன்று, இங்கிலிஷ் லீக் கிண்ண காற்பந்துப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு எதிராகக் களமிறங்குகிறார்.
அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு இவர் முன்மாதிரியாகத் திகழ்வார் என்று பெரிதும் பேசப்படுகிறது.
“மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு எதிராக நான் களமிறங்கினால் அது எனது ஈழத் தமிழர் சமூகத்துக்கு மிகவும் முக்கியமான, பெருமைமிக்க தருணமாக அமையும். இதன் மூலம் எங்கள் சமூகத்தைப் பற்றி மேலும் பலருக்குத் தெரியவரும். என் சொற்களைவிட எனது செயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். எனவே, காற்பந்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்று விமல் தெரிவித்ததாக பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் தெரிவித்தது.
இதுவரை தாம் பல ஆட்டக்காரர்களுடன் காற்பந்து விளையாடி இருப்பதாகக் குறிப்பிட்ட விமல், தொழில்முறை காற்பந்தாடும் இன்னொரு தமிழரைக் காண்பது மிகவும் அரிது எனக் கூறினார்.
இது மிகவும் கவலைக்குரியது என்றார் அவர்.
தமது குடும்பத்தின் வலுவான ஆதரவு தமக்கு இருப்பதை விமல் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதுதான் பாதுகாப்பான பாதை என அவர்கள் கருதுகின்றனர். ஆனால் எனது பெற்றோர் சற்று வித்தியாசமானவர்கள். எனது இலக்கை நோக்கிச் செல்ல அவர்கள் ஊக்குவித்தனர். இதன் காரணமாக இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்து ஆட்டக்காரராகிவிட்டேன். கனவை நனவாக்க துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.
“பலருக்கு நான் முன்மாதிரியாக இருக்கிறேன் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. பலருக்கு உதவி செய்துள்ளேன், ஆலோசனை வழங்கியுள்ளேன். தொழில்முறை காற்பந்து ஆட்டக்காரராகக் களமிறங்க மேலும் பல தமிழர்களை ஊக்குவிக்க முயற்சி செய்து வருகிறேன். என்னால் அவ்வாறு செய்ய முடிந்தால் நானும் எனது குடும்பத்தினரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவோம்,” என்று விமல் தெரிவித்தார்.