பெய்ஜிங்: சீன காற்பந்து அமைப்பு 43 பேரை காற்பந்து தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று வாழ்நாள் தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்டவர்கள் சூதாட்டம், ஆட்டத்தின் போக்கை மாற்றுவது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்டவர்களில் மூவர் சீனாவுக்காக அனைத்துலக காற்பந்து போட்டிகளில் விளையாடிய வீரர்கள். மேலும் தென்கொரிய வீரர் சன் ஜுன்-ஹோவும் தடை செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரிய வீரர் சன் ஜுன்-ஹோ பணம் வாங்கிக்கொண்டு ஆட்டத்தில் சூழ்ச்சி செய்ததாக சீன காற்பந்து அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனாவில் நடக்கும் சூப்பர் லீக் காற்பந்து போட்டியில் ஷன்டோங் தைஷன் அணிக்காக சன் ஜுன்-ஹோ விளையாடினார். அப்போது அவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட 10 மாதத்திற்கு மேலாக சீனாவில் தடுத்துவைக்கப்பட்ட சன் ஜுன்-ஹோ இவ்வாண்டு மார்ச் மாதம் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா விளையாட்டில் ஊழல் நடப்பதை ஒடுக்கி வருகிறது. குறிப்பாக காற்பந்தில் தவறு நடப்பதை தடுத்து வருகிறது. ஏற்கெனவே அது பல முக்கிய பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தி சிறையில் அடைத்துள்ளது.

