காற்பந்து: ஒரே பிரிவில் சிங்கப்பூர், இந்தியா

1 mins read
fd62aa1c-f218-49dc-a71f-134f40a562b4
2024 மார்ச் 21ஆம் தேதி தேசிய விளையாட்டரங்கில் சீனாவிற்கு எதிராக நடந்த ஆசியக் கிண்ணத் தகுதிச்சுற்று ஆட்டத்தை 2-2 என்ற கோல் கணக்கில் சமன்செய்த மகிழ்ச்சியில் சிங்கப்பூர் அணியினர். - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

அதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளில் இந்தியாவும் சிங்கப்பூரும் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஹாங்காங்கும் பங்ளாதேஷும் அப்பிரிவில் இடம்பெற்றிருக்கும் மற்ற இரு அணிகள்.

உலகத் தரவரிசையில் 161ஆம் இடத்தில் இருக்கும் சிங்கப்பூர் 2025 மார்ச் 25ஆம் தேதி நடக்கும் ஆட்டத்தில் 156ஆம் இடத்திலுள்ள ஹாங்காங்குடன் மோதவுள்ளது.

தரவரிசையில் 127ஆம் இடத்திலுள்ள இந்திய அணி, சிங்கப்பூருடன் இதுவரை 14 முறை மோதியுள்ளபோதும் நான்கு முறை மட்டுமே வென்றுள்ளது.

முதலாவது தகுதிச்சுற்று மூலம் ஏற்கெனவே 18 அணிகள் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னேறிவிட்டன.

எஞ்சியுள்ள ஆறு இடங்களைக் கைப்பற்ற 24 அணிகள், தலா நான்கு அணிகளாக ஆறு பிரிவுகளில் மோதவிருக்கின்றன. ஒவ்வோர் அணியும் தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற மூன்று அணிகளுடன் இருமுறை மோதும்.

தகுதிச்சுற்றுப் போட்டிகள் 2026 மார்ச் வரை நீடிக்கும்.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி, 2027 ஜனவரி 15 முதல் பிப்ரவரி 8 வரை சவூதியில் நடக்கும் ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னேறும்.

குறிப்புச் சொற்கள்