உலகக் கிண்ணம் வென்றவர், முன்னாள் லிவர்பூல் வீரர், சாம்பியன்ஸ் லீக் கிண்ணம் வென்றவர், முன்னாள் இங்கிலீஷ் பிரிமியர் லீக் துணைப் பயிற்றுவிப்பாளர் எனப் பல முன்னணிக் காற்பந்துப் பிரபலங்கள் சிங்கப்பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து ஜப்பானின் சுட்டுமோ ஓகூரா பதவி விலகினார்.
இதையடுத்து அந்த இடத்திற்கு 60க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்நிலையில், புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி காற்பந்து சங்கம் 15 நபர்களின் பெயரைப் பரிசீலித்து வருகிறது. அதில் பிரபல இத்தாலி வீரர் ஃபேபியோ கேனவாரோ,51, பெயரும் உள்ளது என்று பெயர் வெளியிட விரும்பாதவர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தகவலைப் பகிர்ந்தார்.
கேனவாரோ 2006ஆம் ஆண்டு நடந்த காற்பந்து உலகக் கிண்ணத்தை வென்றவர். அவர் சீனாவில் நடக்கும் சூப்பர் லீக் போட்டியில் குவான்சோ அணியை 2019ல் வெற்றிபெறச் செய்தார்.
லிவர்பூல் அணிக்கு விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஹேரி கிவெல்லும் பிரேசில் பயிற்றுவிப்பாளர் மானோ போல்கிங்கும் சிங்கப்பூர் காற்பந்து அணிக்குப் பயிற்றுவிப்பாளராக விண்ணப்பம் செய்துள்ளனர்.
இனிவரும் சில வாரங்களில் புதிய பயிற்றுவிப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.