தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கிரிக்கெட் வீரரின் கிராமத்தில் விளையாட்டரங்கம் கட்டும் உ.பி. அரசு

1 mins read
a5717fb0-d0bc-4638-9a61-2d913c946376
இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி. - படம்: ஏஎஃப்பி

லக்னோ: நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமிக்கு மேலும் ஒரு நற்செய்தி!

அவர் பிறந்த சிற்றூரில் ஒரு விளையாட்டு அரங்கைக் கட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ஒரு ஹெக்டர் (2.47 ஏக்கர்) நிலம் அடையாளம் காணப்பட்டுவிட்டது.

மாநிலம் முழுவதும் 20 விளையாட்டு அரங்குகளைக் கட்டும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

“உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார் ஷமி. அவரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர் பிறந்து வளர்ந்த சகாஸ்பூர் அலிநகரில் ஒரு விளையாட்டு அரங்கைக் கட்ட அரசு முடிவுசெய்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டது.

ஐந்து கோடி ரூபாய் செலவில் அவ்விளையாட்டரங்கைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஷமியின் பெற்றோரை வைத்து, அதற்கு அடிக்கல் நாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறந்தவெளி உடற்பயிற்சிக்கூடம், ஓட்டப் பந்தயத் தடம் உள்ளிட்ட வசதிகள் அவ்விளையாட்டரங்கில் அமையும்.

அதற்கான வரைவுத்திட்டம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் ஒப்புதல் கிடைத்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் விளையாட்டரங்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிடும் என்றும் அம்ரோகா மாவட்ட நீதிபதி ராஜேஷ் குமார் தியாகி கூறினார்.

ஷமி உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவர் என்றாலும் அவர் உள்ளூர்ப் போட்டிகளில் மேற்கு வங்க மாநிலத்திற்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்