இருபது வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் சிங்கப்பூர் ஓட்டப்பந்தய வீராங்கனை லாவண்யா ஜெய்காந்த், 18.
பெரு தலைநகர் லிமாவில் நடைபெற்று வரும் உலக திடல்தடப் போட்டிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) 54.66 வினாடிகளில் பந்தயத்தை முடித்த புதிய தேசிய சாதனை நிகழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இந்த சாதனை மூலம் 1974ஆம் ஆண்டு சீ சுவீ லீ புரிந்த தேசிய சாதனையை லாவண்யா முறியடித்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் தெஹ்ரான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சுவீ லீ 55.08 வினாடிகளில் பந்தயத்தை ஓடி முடித்ததே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது.
சாதனையை நோக்கிய வீராங்கனை லாவண்யாவின் பயணம், அவர் ஏழு வயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது எனவும் மகளின் இந்த சாதனை முயற்சி குறித்து பெருமிதம் கொள்வதாகவும், லாவண்யாவின் பெற்றோர் ஜெய்காந்த் ஆறுமுகம், லக்ஷ்மி ஜெய்காந்த் தமிழ் முரசிடம் கூறினர்
“தொடக்கப்பள்ளியில் பயின்ற காலத்திலிருந்தே ஓட்டப்பந்தயம் தொடர்பான லாவண்யாவின் ஆர்வம் தெளிவாகத் தென்பட்டது. வகுப்புக்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு நாளும் காலை 5:30 மணிக்குக் கண்விழித்து காலை உடற்பயிற்சியைத் தவறாமல் செய்து முடிப்பதற்குப் பல முயற்சிகள் மேற்கொள்வார். இது விளையாட்டு மீதான அவரின் கடப்பாட்டை எனக்கு வெளிப்படுத்தியது. வரும்காலங்களிலும் அவர் அநேக சாதனைகள் புரிய வேண்டும்,” என்று சொன்னார் திரு ஜெய்காந்த் ஆறுமுகம்.
லாவண்யாவின் சாதனை பற்றிக் குறிப்பிட்ட அவரின் தாயார் லக்ஷ்மி ஜெய்காந்த், தம் மகள் விளையாட்டுப் பள்ளிக்குச் செல்வதாகக் கூறியபோது அவரது முடிவை ஆதரித்ததாகச் சொன்னார்.
“அங்கு லாவண்யா மனமகிழ்ச்சியுடன் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். அதேபோல் அவருக்கு அங்குச் சிறப்பான தருணங்கள் அமைந்ததை எண்ணும்போது நிறைவாக உள்ளது,” என்றார் லக்ஷ்மி.
“வேகமாகச் செல்வது அவருக்குப் பிரியம். இந்த சாதனைக்குப் பிறகு, லாவண்யா இன்னும் அநேக இலக்குகளின் மேல் அவரது கவனத்தைப் பதிப்பார்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, புதிய தேசிய சாதனைக்குச் சொந்தக்காரரான லாவண்யா, இன்ஸ்டகிராம் பதிவில் நீண்டகால சாதனையை முறியடிப்பது வியத்தகு உணர்வு. இந்த சாதனையைப் புரிவதற்குப் பயிற்றுவிப்பாளர் ஃபேபியன் முழுமையான அர்ப்பணிப்புடன் தனக்கு உதவினார் என்றும் இதற்காக பயிறுவிப்பாளருக்குத் தாம் பெரிதும் கடமைப்பட்டிருப்பதாகவும் லாவண்யா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மேற்கூறிய போட்டியில் 52 விளையாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இதில் லாவண்யா 30வது இடத்தைப் பிடித்தார்.