2027ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குச் சிங்கப்பூர் தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்த வெற்றியைச் சிங்கப்பூர்க் காற்பந்துக் குழு, சிங்கப்பூருக்கு அர்ப்பணித்துள்ளது.
உலகக் காற்பந்துத் தரவரிசையில் 155வது இடத்தில் உள்ள சிங்கப்பூர், செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டம் ஹாங்காங்கின் கை டாக் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அங்குக் கூடிய 47,762 ரசிகர்களில் ஏறத்தாழ 2,000 பேர் சிங்கப்பூர் ரசிகர்கள் ஆவர்.
மார்ச் மாதம், சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
செவ்வாய்க்கிழமையன்று ஹாங்காங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 15வது நிமிடத்தில் ஹாங்காங் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆனால், மனந்தளராமல் போராடிய சிங்கப்பூர் அணியினர் ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் ஆட்டத்தைச் சமன் செய்தனர். சிங்கப்பூருக்காக ஷாவால் அன்வார் கோல் போட்டார். நான்கு நிமிடங்கள் கழித்து, சிங்கப்பூர் அதன் இரண்டாவது கோலைப் போட்டது.
இம்முறை இல்ஹான் ஃபாண்டி அனுப்பிய பந்து வலையைத் தொட்டது.
இதுவே சிங்கப்பூரின் வெற்றி கோலாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்த வெற்றியின் மூலம் வரலாறு படைத்த சிங்கப்பூர்க் காற்பந்துக் குழுவுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் புகழாரம் சூட்டினார். திறம்பட விளையாடி எதிரணியின் விளையாட்டரங்கில் வாகை சூடிய சிங்கப்பூர் குழுவைப் பாராட்டி அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த சிங்கப்பூர் ஆட்டக்காரர்களைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மெச்சினார்.
“இன்றிரவு நமது சிங்கங்கள் கர்ஜித்தனர். வெற்றி பெற்று அதன் மூலம் ஆசியக் கிண்ணத்துக்குத் தகுதி பெற்றிருக்கும் சிங்கப்பூர் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனந்தளராது, மிகுந்த முனைப்புடன் விளையாடி நாட்டுக்கு இப்பரிசைத் தந்த சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உட்பட குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி.
“சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த சிங்கப்பூர்க் காற்பந்துக் குழுவுக்கு சிங்கப்பூரர்களின் முழுமையான ஆதரவு உண்டு,” என்று திரு வோங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். ஆட்டம் முடிந்ததும் விளையாட்டாளர்களுக்கான அறையில் அவர்களைக் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ பாராட்டினார்.
இதைக் காட்டும் காணொளியை அவர் இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.
ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர்க் குழுவுக்கு முழு ஆதரவை வழங்குமாறு அவர் சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

