சென்னை: மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் அதிக ஓட்டங்களைக் குவித்து, இந்திய மகளிரணி புதிய வரலாறு படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
போட்டியின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை, ஆறு விக்கெட் இழப்பிற்கு 603 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய மகளிரணி தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மகளிரணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 575 ஓட்டங்களைக் குவித்ததே ஓர் இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள்.
அப்போது, ஆஸ்திரேலிய அணி 78 முறை பந்தை எல்லைக்கு விரட்டிய நிலையில், இம்முறை இந்திய அணி 80 ‘ஃபோர்’களை விளாசி, அச்சாதனையையும் தகர்த்தது.
போட்டியின் முதல் நாளில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 525 ஓட்டங்களைக் குவித்த்து. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதற்குமுன் ஒரே நாளில் இவ்வளவு ஓட்டங்கள் எடுக்கப்பட்டதில்லை.
கடந்த 2002ஆம் ஆண்டு கொழும்பில் ஸிம்பாப்வே அணிக்கெதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆடவரணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 509 ஓட்டங்களைக் குவித்ததே முன்னைய சாதனை.
அதேபோல, மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே நாளில் 500க்கு மேல் ஓட்டங்களைச் சேர்த்ததும் இதுவே முதன்முறை.
தொடர்புடைய செய்திகள்
இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா அதிவேக இரட்டைச் சதம் அடித்துச் சாதித்தார். 194 பந்துகளில் அந்த மைல்கல்லை எட்டிய அவர், 205 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இன்னொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனாவும் சதமடித்தார். அவர் 149 ஓட்டங்களை விளாசினார்.
இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 292 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சில் பந்தடிக்கத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ஓட்டங்களை எடுத்திருந்தது.
முன்னதாக, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரையும் இந்திய மகளிரணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.