புதுடெல்லி: கபடி உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற இந்திய மகளிர் அணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ண கபடி போட்டி பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, கிண்ணத்தை வென்றது.
இதையடுத்து, இந்திய அணிக்கு தனது சமூக ஊடகப் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்த வெற்றி நாட்டைப் பெருமைப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணி சிறந்த மனவுறுதி, திறமை, அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளது என்றும் கபடி அணியின் வெற்றி எண்ணற்ற இளையர்களை அந்த விளையாட்டில் ஈடுபட வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இளையர்கள் பெரிய கனவுகளைக் காணவும் உயர்ந்த இலக்கை அடையவும் மகளிர் அணியின் வெற்றி ஊக்குவிக்கும் என்று திரு மோடி தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 11 அணிகள் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்றன.
லீக் போட்டிகளில் தாய்லாந்து, பங்ளாதேஷ், ஜெர்மனி, உகாண்டா அணிகளை வீழ்த்திய இந்திய அணி, அரையிறுதிப் போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி அசத்தியது.
இதையடுத்து, இறுதிப்போட்டியில் இந்தியா, தைவான் அணிகள் மோதின. அதில் 35-28 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி வாகை சூடியது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய அணி ஏற்கெனவே இரண்டு முறை உலகக் கிண்ணத்தையும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
மேலும், ஆசிய வெற்றியாளர் போட்டியில் தொடர்ந்து ஐந்துமுறை பட்டம் வென்று அவ்வணி சாதித்துள்ளது.

