உலகின் முன்னணிக் காற்பந்துக் குழுக்களில் ஒன்று விளையாடியபோதும் தேசிய விளையாட்டரங்கில் அப்படியொன்றும் பேராரவாரமான சூழல் காணப்படவில்லை.
முந்திய நாள் பயிற்சியின்போது ஏறக்குறைய 15,000 ரசிகர்கள் திரண்டு லிவர்பூல் குழுவினரை உற்சாகப்படுத்தினர். ஆயினும், போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமை 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட தேசிய விளையாட்டரங்கில் 28,597 பேரே திரண்டிருந்தனர்.
இதற்கு நுழைவுச்சீட்டுக் கட்டணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது, புதன்கிழமை ஜெர்மானிய லீக் வெற்றியாளரான பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிரான ஆட்டத்தைக் காணச் செல்லலாம் என்றும் ரசிகர்கள் நினைத்திருக்கலாம்.
சக இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான லெஸ்டர் சிட்டிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த நட்புமுறை ஆட்டத்தில் லிவர்பூல் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முகம்மது சாலா, டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்ட், குழுத்தலைவர் வெர்ஜில் வேன் டைக், உலகக் கிண்ண வெற்றியாளர் அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அடங்கிய 11 பேர் குழுவை லிவர்பூல் களமிறக்கியது.
எட்டு நிமிடங்களில் லிவர்பூல் மூன்று கோல்களை அடிக்க, அரங்கில் உற்சாகம் பீறிட்டது.
ஆட்டம் தொடங்கி சரியாக அரைமணி நேரத்தில் அதன் முதல் கோலைப் போட்டார் டார்வின் நூன்யஸ். 35வது பாபி கிளார்க்கும் 38வது நிமிடத்தில் டியோகோ ஜோட்டாவும் ஆளுக்கு ஒரு கோலை அடித்தனர். சாலா துல்லியமாகப் பந்தை அனுப்பியது அவ்விரு கோல்கள் விழவும் காரணமாக அமைந்தது.
இடைவேளைக்குப்பின் லிவர்பூல் களம் திரும்பியபோது குழுவில் பத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் கோலடித்து முன்னிலையை நான்காக உயர்த்தினார் பென் டோக்.
நட்சத்திர ஆட்டக்காரர் ஜேமி வார்டி இல்லாமல் விளையாடிய லெஸ்டர் குழு தொடக்கத்தில் பல வாய்ப்புகளை உருவாக்கியபோதும் அதன் கோல் முயற்சி ஈடேறவில்லை.
அடுத்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கும் நிலையில், அன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் செல்சியுடன் லிவர்பூல் பொருதவிருக்கிறது.