மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியாக மைக்கேல் கேரிக் இருந்த காலம் கசப்பான முடிவை எட்டியுள்ளது. ஓல்ட் டிராஃபோர்டில் ஒரு நம்பிக்கைக்குரிய புதிய அத்தியாயமாகத் தொடங்கிய ஒன்று, திடீரென முடிவுக்கு வந்துள்ளது.
2026/27 காற்பந்துப் பருவத்தை மிக மோசமாகத் தொடங்கியுள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணி, மைக்கேல் கேரிக்கை தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது. முதல் 10 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, தற்போது பிரிமியர் லீக் தரவரிசையில் தரம் இறக்கப்படும் பகுதியில் உள்ளது.
முன்னாள் யுனைடெட் அணியின் மத்திய திடல் ஆட்டக்காரராக இருந்து, நிரந்தர தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இந்த முடிவு வந்தது. 2026 ஜனவரியில் அவரது பதவிகாலத்தின் தொடக்கநிலையில் அவரது தலைமைப் பொறுப்பு அணி பல ஆட்டங்களை வெற்றிகரமாகக் கடக்க வகை செய்தது.
முந்தைய நிர்வாகத்தின் கீழ் நிலவிய கொந்தளிப்பான காலகட்டத்திற்குப் பிறகு, கேரிக் கடந்த பருவத்தில் யுனைடெட் அணியை பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு வழிநடத்தி, சாம்பியன்ஸ் லீக் தகுதிக்கு வழிவகுத்து, நம்பிக்கையை மீட்டெடுத்தார்.
இருப்பினும், அந்த ஆரம்பகால நம்பிக்கை விரைவாக மறைந்துவிட்டது. இந்தப் பருவத்தில் யுனைடெட் அணி தனது முதல் 10 பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து வெறும் எட்டுப் புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
கோமோ அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக்கில் 4-1 என்ற கோல் கணக்கில் அடைந்த அவமானகரமான தோல்வியும், அதைத் தொடர்ந்து போர்ன்மவுத் அணியிடம் சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்வியும், கேரிக்கின் பதவி மீதான நிலையை ஆட்டங்காண வைத்தன.
அதன்பிறகு யுனைடெட் அணி ரோமாவுக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் பரபரப்பான மீள்வெற்றியைப் பெற்றபோதிலும், ஞாயிற்றுக்கிழமை ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக நடைபெற்ற அசாதாரணமான 4-4 சமநிலை, மற்றொரு பின்னடைவான முடிவாக அமைந்தது.
இதற்கிடையே, யுனைடெட் அணி, தனது அடுத்த தலைமைப் பயிற்றுவிப்பாளராக மௌரிசியோ பொச்செட்டினோவை நியமிப்பது தொடர்பாக ஏற்கெனவே ஒரு கொள்கை ரீதியான உடன்பாட்டை எட்டியுள்ளது.
அந்த அர்ஜென்டினா நாட்டவர் பிரிமியர் லீக்கிற்குத் திரும்புவதில் ஆர்வமாக இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அமெரிக்க தேசிய அணியிலிருந்து அவரை விடுவிப்பது குறித்து யுனைடெட் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது.
