மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த மங்கையாக மகுடம் சூடிய மந்தனா

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த மங்கையாக மகுடம் சூடிய மந்தனா

2 mins read
4d196f72-5880-4290-bc9f-e2440cd802c3
மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு உலகச் சாதனைகளை நிகழ்த்திய இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு உலகச் சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளில் ஆக அதிக ஓட்டங்களும் அதிக சதங்களும் குவித்த மங்கை எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். துபாயில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) ஹாங்காங் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் மந்தனா ஏற்கெனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.

இந்திய அணியின் துணைத் தலைவரான அவர், 64 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களை விளாசினார். அதன் மூலம் அவர், அனைத்துலகப் போட்டிகளில் ஆக அதிக ஓட்டங்களை அடித்திருந்த இந்திய மகளிர் அணியின் முன்னாள் தலைவர் மிதாலி ராஜை மிஞ்சினார். மிதாலி, அனைத்துலகப் போட்டிகளில் 10,868 ஓட்டங்களை எடுத்துள்ளார். இப்போது மந்தனா எடுத்துள்ள மொத்த ஓட்டங்கள் 10,880.

இடக்கை வீராங்கனையான மந்தனா, 18வது சதத்தையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதன்வழி, இதற்கு முன்னர் 17 சதங்களை அடித்திருந்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் மெக் லானிங்கையும் தென்னாப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டையும் அவர் பின்னுக்குத் தள்ளினார்.

“இவையெல்லாம் நடந்தது எனக்குத் தெரியவில்லை,” என்றார் மந்தனா.

மட்டை பிடித்துப் பந்துகளை அடிக்கத் தமக்குப் பிடிக்கும் என்று கூறிய அவர், அணிக்குப் பங்களிப்பதில் மகிழ்ச்சி என்று சொன்னார்.

2013ஆம் ஆண்டு, இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கினார் மந்தனா. அனைத்துலக அளவில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி என மூன்று பிரிவுகளிலும் சதம் அடித்த முதல் வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றவர் மந்தனா. டி20 போட்டியில் சென்ற ஆண்டு சதம் அடித்தபோது அந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார்.

மகளிர் ஆசியக் கிண்ணப் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில், முதலில் பந்தடித்த இந்தியா, 5 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் 56 ஓட்டங்களில் சுருண்டது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்