கொச்சி: உலகக் கிண்ணக் காற்பந்தை வென்ற லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வரும் நவம்பர் மாதம் இந்தியாவின் கேரள மாநிலத்திற்குச் செல்லவிருக்கிறது.
அங்கு அவ்வணி குறைந்தது இரு நட்புமுறை ஆட்டங்களில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆட்டங்கள் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு அரங்கில் நடைபெறும் என முன்னர் கூறப்பட்டது. ஆனால், அத்திடலில் கிரிக்கெட் ஆடுகளம் இருப்பதால் அனைத்துலகக் காற்பந்து ஆட்டத்திற்கு அது பொருத்தமானதாக இராது எனச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, அர்ஜென்டினா அணி விளையாடும் போட்டிகளைக் கொச்சி ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கிற்கு மாற்றுவது என முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்த உறுதியான அறிவிப்பை மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரகிமான் விரைவில் வெளியிடுவார் என்று ‘மனோரமா ஆன்லைன்’ செய்தி தெரிவிக்கிறது.
அர்ஜென்டினா அணியை எதிர்த்தாடவிருக்கும் அணிகள் எவை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.