உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும் வேளையில் காயமுற்ற மெஸ்ஸி

உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும் வேளையில் காயமுற்ற மெஸ்ஸி

2 mins read
05427504-ffdd-40fb-ab96-e4ae39fce5b8
லயனல் மெஸ்ஸி. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

மையாமி: இவ்வாண்டு காற்பந்து உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே எஞ்சியிருக்கும் வேளையில் அர்ஜென்டினா நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி காயமடைந்திருக்கிறார்.

மெஸ்ஸியின் ஹேம்ஸ்ட்ரிங் எனப்படும் தொடைக்குப் பின்னால் உள்ள கால் பகுதியில் இருக்கும் தசைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மருத்துவப் பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளதென அவரின் இன்டர் மையாமி குழு திங்கட்கிழமை (மே 25) அறிவித்தது. அவரால் எப்போது மீண்டும் விளையாட முடியும் என்பது குறித்து அமெரிக்காவின் மேஜர் லீக் காற்பந்துக் குழுவான மையாமி தகவல் வெளியிடவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (மே 24) இன்டர் மையாமியும் ஃபிலடெல்ஃபியாவும் மோதிக்கொண்ட ஆட்டத்தில் காயமுற்றதால் மெஸ்ஸி ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அந்த ஆட்டத்தில் மையாமி 6-4 எனும் கோல் கணக்கில் வென்றது.

தனது இடது காலைப் பிடித்துக்கொண்டு தடுமாறிய மெஸ்ஸி அந்த ஆட்டத்திலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. எனினும், விளையாட்டாளர் அறைக்குப் போகும்போது அவர் இயல்பாக நடந்து சென்றதுபோல் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

“அவரால் எப்போது மறுபடியும் உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பது அவரின் மருத்துவ, உடலுறுதி முன்னேற்றத்தைப் பொறுத்திருக்கிறது,” என்று இன்டர் மையாமி அறிக்கை மூலம் குறிப்பிட்டது.

நடப்பு வெற்றியாளர் அர்ஜென்டினா

உலகக் கிண்ண நடப்பு வெற்றியாளர் அணியான அர்ஜென்டினா கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கவுள்ள நிலையில் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவது கேள்விக்குறியாக இருக்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்றும் ஏற்று நடத்தும் இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டி வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி தொடங்கும்.

அதற்கு ஐந்து நாள்களுக்குப் பிறகு அமெரிக்காவின் கான்சஸ் நகரில் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவைச் சந்திக்கிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு இன்டர் மையாமி குழுவில் சேர்ந்தார் மெஸ்ஸி. அதிலிருந்தே மெஸ்ஸியின் உடலுறுதி பாதிக்கப்படாத வகையில் மையாமி அவரை கவனமாகக் களமிறக்கி வந்துள்ளது. குறுகிய காலத்தில் மையாமி அதிக விளையாட்டுகளில் ஆடும் வேளைகளில் மெஸ்ஸி விளையாடாமல் இருந்து வருகிறார்.

மேஜர் லீக் காற்பந்து தற்போது உலகக் கிண்ணப் போட்டிக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துமெஸ்ஸிஅர்ஜென்டினாஉலகக் கிண்ணம்