ஃபிலடெல்ஃபியா: அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்ற ‘ஐ’ பிரிவு ஆட்டமொன்றில், பிரான்ஸ், 3-0 எனும் கோல் கணக்கில் ஈராக்கை வெற்றிகண்டது.
கிலியன் இம்பாப்பே இரண்டு கோல்களைப் போட்டார். அந்த கோல்கள் ஆட்டத்தின் 14வது நிமிடத்திலும் 54வது நிமிடத்திலும் வந்தன.
ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பெலே தம் பங்கிற்கு ஒரு கோலை அடித்தார். இந்த வெற்றியால் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகியிருக்கிறது.
ஆட்டத்தின் முற்பாதியில் மழை கொட்டியது. அதனைப் பொருட்படுத்தாது விளையாட்டாளர்கள் திறன் காட்டினர். பின்னர் இடியுடன்கூடிய பெருமழையின் காரணமாக, ஆட்டம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் வானிலை மேம்பட்டதும், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
நியூ ஜெர்சியில் நடைபெற்ற ‘ஐ’ பிரிவின் மற்றோர் ஆட்டத்தில், நார்வே, 3-2 எனும் கோல் எண்ணிக்கையில் செனகலைத் தோல்வியுறச் செய்தது. நார்வேயும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது.
இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால் ஈராக்கும் செனகலும் இந்தப் பிரிவில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன.
கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் நடைபெற்ற ‘ஜே’ பிரிவின் இன்னோர் ஆட்டத்தில், அல்ஜீரியா, 2-1 எனும் கோல் எண்ணிக்கையில் ஜோர்தானை வென்றது. இந்த ஆட்டத்தில் தோல்வியுற்றதால் ஜோர்தான் இந்தப் பிரிவில் கடைசியில் உள்ளது.
பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஆகச் சிறந்த நிலையில் வரும் எட்டு அணிகள், இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும்.

