பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவிருக்கும் உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை (ஆகஸ்டு 28) பின்னேரம் நடைபெறவிருக்கிறது.
அதற்குச் சில மணி நேரத்திற்குமுன், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் விற்பனையானதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே மாதத்தில் ஒரு மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இன்னும் 500,000 நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆகாமலிருப்பதாகக் கூறப்பட்டது.
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற விளையாட்டுகளின்போது, சாதனை அளவாக 2.7 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன. அப்போது 97 விழுக்காட்டு நுழைவுச்சீட்டுகள் விற்பனையானதாகக் கூறப்பட்டது.
2008ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற விளையாட்டுகளைக் காண 1.82 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன. ஏற்பாட்டாளர்கள், 1.62 மில்லியன் நுழைவுச்சீட்டுகளைப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்ததாக அனைத்துலக உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் குழு தெரிவித்தது.
2016ஆம் ஆண்டு ரியோ உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு 2.1 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன.
இந்த ஆண்டு அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

