ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ண இறுதிப் போட்டியில் செனகலுடன் மோதல்

50 ஆண்டு ஏக்கம் தீர்க்க மொரோக்கோ முனைப்பு

2 mins read
b051da9f-0e57-4675-8dd9-4bd788a079e9
முக்கிய ஆட்டங்களில் கோல் போடுவதில் வல்லவரான செனகலின் சாடியோ மானேவும் (இடது) நடப்பு ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத் தொடரில் ஆக அதிகமாக ஐந்து கோல்களை அடித்துள்ள மொரோக்கோவின் பிராஹிம் டியாசும் இறுதிப் போட்டியிலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

ரபாத்: ஆப்பிரிக்க நாடுகள் காற்பந்துக் கிண்ண இறுதிப் போட்டியில் வலிமைமிக்க மொரோக்கோ - செனகல் அணிகள் மோதவிருக்கின்றன.

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

போட்டியை ஏற்று நடத்தும் மொரோக்கோ அணி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிரிக்காவில் மகுடம் சூடும் முனைப்புடன் இருக்கிறது.

சென்ற முறை ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணத்தில் காலிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற பிறகு, கடந்த ஈராண்டுகளாக வெல்ல முடியாத அணியாக மொரோக்கோ திகழ்கிறது.

பிரான்சின் பிஎஸ்ஜி குழுவிற்காக விளையாடி வருபவரும் தற்போதைய சிறந்த ஆப்பிரிக்க வீரர் விருது வெற்றியாளாருமான அச்ரஃப் ஹக்கிமியின் தலைமையில் மொரோக்கோ களம் காண்கிறது.

இந்நிலையில், சொந்த அரங்கில் தாய்நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கியுள்ளதும் அவ்வணிக்குச் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் ரபாத்தின் பிரின்ஸ் மௌலே அப்தெல்லா அரங்கில் நடக்கவுள்ள இறுதிப் போட்டியைக் காண கிட்டத்தட்ட 70,000 மொரோக்கோ ரசிகர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இறுதிப் போட்டியில் விளையாட நாங்கள் தகுதியான அணிதான். மாலி, கெமரூன், நைஜீரியா போன்ற முன்னணிக் குழுக்களை வீழ்த்திய நாங்கள், தற்போது இன்னொரு சிறந்த அணியுடன் பொருதவிருக்கிறோம்,” என்றார் மொரோக்கோ பயிற்றுநர் வலித் ரெக்ராகி.

ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கிண்ணத்திற்குக் காத்திருப்பதாக அவ்வணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ரோமென் சயிஸ் கூறினார்.

“மொரோக்கோ மக்கள் அனைவருமே நீண்டகாலமாக இதற்குக் காத்திருக்கின்றனர். எம்மக்கள் அனைவரின் கனவு இது,” என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணத் தொடரில் அரையிறுதிச் சுற்றுவரை மொரோக்கோ முன்னேறி வருகிறது. அந்நிலையை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி மொரோக்கோதான் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்பந்து விளையாட்டிற்காக மொரோக்கோ பெருமுதலீடு செய்துள்ள நிலையில், கிண்ணம் வெல்வது அதற்குக் கிட்டிய பெரும்பயனாகவும் இருக்கும்.

பெருந்தடையாக செனகல்

இந்நிலையில், மொரோக்கோவின் கனவு நனவாக முட்டுக்கட்டையாகத் திகழ்கிறது செனகல்.

அரையிறுதியில் ஏழுமுறை வெற்றியாளரான எகிப்தை அவ்வணி தோற்கடித்தது.

2021ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் செனகல், எகிப்தை வென்று வாகை சூடியிருந்தது.

அவ்விரு போட்டிகளிலும் வெற்றி கோலை அடித்த 33 வயது சாடியோ மானே, முக்கியப் போட்டிகளில் சாதிக்கும் ஆட்டக்காரராகத் திகழ்கிறார்.

முன்னாள் லிவர்பூல் வீரரான மானே, ஆப்பிரிக்க நாடுகள் கிண்ணப் போட்டிகளில் தான் விளையாடுவது கடைசி முறை என அறிவித்துவிட்டார்.

அதனால், “இறுதிப் போட்டி என்றாலே வெற்றிக்குத்தான் குறி. இதுவே எனக்கு கடைசி இறுதிப் போட்டி என்பதால் என் நாட்டிற்கு வெற்றி தேடித்தர முயல்வேன்,” என்றார் மானே.

2023 வெற்றியாளரான ஐவரி கோஸ்ட் காலிறுதிச் சுற்றிலேயே வெளியேறியது.

குறிப்புச் சொற்கள்