இறுதிச் சுற்றில் சாந்திக்கு இடமில்லை

1 mins read
6882dec9-3e64-4855-9a93-bc1d95d49889
200 மீட்டர் அரையிறுதிச் சுற்றில் பின்தங்கிய சாந்தி பெரேரா (இடது). - படம்: ஏஎஃப்பி

புடாபெஸ்ட்: உலகத் திடல்தட வெற்றியாளர் போட்டியில் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறத் தவறினார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி பெரேரா.

ஹங்கேரித் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்துவரும் அப்போட்டியில், மூன்றாவது அரையிறுதிச் சுற்றில் இடம்பெற்ற சாந்தி ஆறாம் நிலையில் பந்தயத்தை முடித்தார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 22.79 நொடிகள்.

மூன்றாவது அரையிறுதிச் சுற்றில், நடப்பு உலக வெற்றியாளரான ஜமைக்காவின் ஷெரிக்கா ஜாக்சன் 22.00 நொடிகளில் பந்தயத்தை முடித்து, முதலிடம் பிடித்தார்.

நடப்பு ஆசிய வெற்றியாளரான 26 வயது சாந்தி, 200 மீட்டர் தகுதிச் சுற்றில் 22.57 நொடிகளில் புதிய தேசிய சாதனையுடன் பந்தயத் தொலைவைக் கடந்து, அடுத்த ஆண்டு பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அடுத்ததாக வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடக்கவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளவிருக்கும் சாந்தி, அங்கும் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்