உலகின் தலைசிறந்த நீச்சல் விளையாட்டு வீரர்களைப் பார்ப்பது மட்டுமின்றி ஆர்வலர்கள், பொதுமக்கள் என சமூகத்தினர் அனைவரும் சிங்கப்பூரில் நடக்கவுள்ள உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
போட்டிகள், விளையாட்டு சவால்கள், கலந்துறவாடல் காட்சிகள் போன்ற சுவாரசிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது எதிர்வரும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் - சிங்கப்பூர் 2025 போட்டிகள். உலகளாவிய நீச்சல் விளையாட்டில் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் அதே வேளையில் சிங்கப்பூர் மக்களும் அதனை அரவணைத்து, பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்காசியாவில் முதல் முறையாக உலக நீச்சல் சாம்பியன்ஷிப் - சிங்கப்பூர் 2025 இந்த சின்னஞ்சிறு நாட்டில் நடைபெறுகிறது. உலக அரங்கில் சிங்கப்பூருக்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைகிறது. உலக விளையாட்டின் முக்கிய நிகழ்வான இந்தப் போட்டிகள், ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது.
சிங்கப்பூர் விளையாட்டு மையத்திலும் செந்தோசாவிலும் பல்வேறு அரங்குகளில் இந்தப் போட்டிகள் நடைபெற ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. தற்போது இருக்கும் இடங்களை புத்தாக்கம் தழுவி அனைத்துலகப் போட்டிகளுக்குத் தயார் செய்யப்படுகின்றன.
“வீரர்களுக்கான போட்டிகள் மட்டுமில்லாமல் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நீச்சல் போட்டிகளின் குதூகலத்தைக் கொண்டு செல்லும் நோக்கில் இந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் - சிங்கப்பூர் 2025 அமையும். மே மாதத்தில் தொடங்கும் எஸ்ஜி60 நீச்சல் சவால் உள்ளிட்ட பல அம்சங்களும் அனைவரையும் அரவணைக்கும் கொண்டாட்டமாக இந்தப் போட்டிகள் விளங்குவதை உறுதிசெய்யும்,” என்று கூறினார் ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் திரு மார்க் சே.
“தலைசிறந்த அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது சிங்கப்பூருக்கு மிகப்பெரிய பெருமை. ஓசிபிசி நீச்சல் மையம் போன்ற சிறப்புமிக்க வசதிகள் சிங்கப்பூரில் உள்ளன. 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசியப் போட்டிகள் உட்பட அனைத்துலகப் போட்டிகள் அங்கு நடந்துள்ளன. முதன்முறையாக நடத்தப்பட்ட இளையர் ஒலிம்பிக் விளையாட்டுகள், ஒலிம்பிக் மின்-விளையாட்டுகள் வாரம் போன்ற பிரதான அனைத்துலகப் போட்டிகள் சிங்கப்பூரின் பெயரை உலக அரங்கில் பெருமைப்பாராட்ட வைத்துள்ளன,” என்று திரு சே சுட்டினார்.
உலகின் பெயர் பெற்ற வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பை நம் வீரர்களும் பெறுவது இதன் அனுகூலங்களில் ஒன்று என்று கூறிய திரு சே, நம் நாட்டில் நடக்கும்போது சக சிங்கப்பூரர்கள் தரும் உற்சாகம் வீரர்களுக்கு பெருமையும் உந்துதலையும் தரும் என்று எடுத்துரைத்தார்.
சிங்கப்பூர் விளையாட்டு அரங்க வளாகத்தில் WCH Arena அரங்கின் கட்டுமானம் நடந்துவருகிறது. நீச்சல், கலைத்திறன் நீச்சல் போட்டிகள் அங்கு நடைபெறும். கிட்டத்தட்ட 4,800 பேர் அமரக்கூடிய வளாகத்தின் அருகில் ஒசிபிசி ஸ்குவேரில் ‘ஃபேன் ஸோன்’ அமைக்கப்பட்டு கலந்துறவாடும் நடவடிக்கைகள், நினைவுப்பொருள் விற்பனை பகுதிகள், ஆதரவாளர்களின் கடைகள், உணவு, பான கடைகள் என அனைத்து வயதினரையும் குடும்பங்களையும் ஈர்க்கும் அங்கங்கள் இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
மே மாதத்தில் செந்தோசாவில் கட்டுமானம் தொடங்கப்பட்டு திறந்த நீரில் நீச்சல், உயர முக்குளிப்புப் போட்டிகள் நடைபெறும். நீச்சல் போட்டிகளின் பிரம்மாண்டத்திற்கு ஈடுகொடுக்கும் பிரதான வளாகங்களாக அவை உருமாறும்.
அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவான இடமாக சிங்கப்பூர் இருப்பதை இந்த வளாகங்கள் விளங்கும். போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சிறந்த அனுபவத்தைக் கொண்டுசேர்க்க புத்தாக்கத்தைத் தழுவும் ஆற்றலை ஏற்பாடுகள் பிரதிபலிக்கும்.
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அனைத்துலக விளையாட்டு நிகழ்வாகும். இது உலகெங்கும் சிறந்த வீரர்களை ஒருங்கிணைக்கின்றது.
இந்த சிறப்புப் போட்டிகள் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டைக் கொண்டாடும் ஒரு நிகழ்வாகவும் அமையும். எஸ்ஜி60 நீச்சல் சவால் என்ற அங்கமும் இந்தப் போட்டிகளின் மத்தியில் இடம்பெறுகிறது.
“இந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் - சிங்கப்பூர் 2025 போட்டிகள் விளையாட்டு நிகழ்வைத் தாண்டியது. சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைக் குறிக்கும் இந்தக் கொண்டாட்டத்துடன் இணைந்தது. எஸ்ஜி60 கொண்டாட்டங்களின் அங்கமாக, உலகத் தரம் நீச்சல் போட்டிகளின் குதூகலத்தை சிங்கப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுவருகிறோம்,” என்றார் விழா ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் திரு ஆலன் கோ.
“கடைத்தொகுதிகளில் சாலையோரக் காட்சிகள் அமைக்கப்படுவதைத் தாண்டி, கேம்ஒன் எஸ்ஜி60 சமூக இணைய செயலி, எஸ்ஜி60 நீச்சல் சவால் போன்ற சமூக முனைப்புகளும் ‘ட்ரேஷ் டு ட்ரெஷுர்’, ‘அடாப்ட் அ கண்ட்ரி’ போன்ற பள்ளிகளை அரவணைக்கும் முயற்சிகளும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அனைவரையும் உள்ளடக்க வழிவகுத்துள்ளன,” என்றார் அவர்.
என்றும் கிடைக்காத அரிய காட்சியாக சிங்கப்பூரர்கள் உலகத் தர நீச்சல் வீரர்களை நேரடியாக சாகசம் செய்யும் காட்சிகளைக் காண முடியும் என்று கூறிய திரு கோ, இந்தப் போட்டிகள் அடுத்த தலைமுறை விளையாட்டு நட்சத்திரங்களை ஊக்குவிக்க முனையும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அடுத்த நிலையில் தரமிடப்பட்டுள்ள இந்தப் போட்டிகளில் 190 நாட்டிலிருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
அவர்கள் நீச்சல், கலைத்திறன் நீச்சல், முக்குளிப்பு, நீர் போலோ, திறந்த நீரில் நீச்சல், உயரத்திலிருந்து முக்குளிப்பு ஆகிய ஆறு வகையான நீச்சல் விளையாட்டுகளில் போட்டியிடுவார்கள்.
“விளையாட்டு தேசமாக இவ்வளவு தூர பயணத்தை நாம் மேற்கொண்டதைப் பறைசாற்றும் நல்ல வாய்ப்பாக இந்த பேரளவு விளையாட்டு நிகழ்வு உள்ளது. ஒரு விளையாட்டு வீரராக, ஆசியாவிற்கு அப்பாலிலிருந்து வரும் ஜாம்பவான்களின் அளவுகோல்களை தன்வசப்படுத்தும் அரிய வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கிறது,” என்று உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குறித்து பெருமிதத்துடனும் உற்சாகத்துடனும் பகிர்ந்தார் தேசிய மகளிர் வாட்டர் போலோ அணியின் தலைவர் அபியெல் யோ, 26.
“எங்களின் விளையாட்டு வாழ்க்கைப் பயணத்தின் முத்தாய்ப்பான நிகழ்வை எங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் நேரில் காணும் அரிதான தருணம் கிடைத்ததை வரமாகக் கொள்கிறேன்,” என்று சுட்டினார்.
அதைப் போல தமது பேரின்பத்தைப் பகிர்ந்த மற்றொரு நீர் விளையாட்டு வீரரான லோ சி சி, 35, “தாய்நாட்டில் இவ்வளவு பெரிய போட்டிகளில் ஈடுபடுவது வருணிக்க முடியாத குதூகலத்தைத் தருகிறது,” என்று உணர்வு பொங்க கூறினார் தேசிய ஆடவர் வாட்டர் போலோ அணியைச் சேர்ந்த அவர்.
“நேரடியாக அன்புக்குரியவர்கள் பார்வையாளர் அரங்கிலிருந்து உற்சாகமூட்டும் குரல்களைக் கேட்பதைப் போல வேறு ஈடு எதுவும் இல்லை. இந்தத் தருணத்தை என் குடும்பத்தினருடன், குறிப்பாக என் இரு இளம் மகன்களுடன் பகிர உள்ளதில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளேன்,” என்றார் அவர்.
உலக நீச்சல் போட்டியுடன் கூடிய மற்றொரு போட்டியான ‘உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி’ அதே வேளையில் இடம்பெறும். இந்தப் போட்டியில் 25 முதல் 80 வயதுடைய பொதுமக்கள், அவர்களது வயதுக்கான பிரிவுகளில் போட்டியிடலாம். போட்டியாளர்கள் நீச்சல், கலைத்திறன் நீச்சல், முக்குளிப்பு, நீர் போலோ, திறந்த நீரில் நீச்சல் ஆகிய பிரிவுகளில் போட்டியிடலாம்.
உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி, ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறும். முன்னணி விளையாட்டு வீரர்களுடன் பொதுமக்கள் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இந்தப் போட்டி வழங்குகிறது.
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் அதே நேரத்தில் இந்த உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டி நடைபெறுவது இது முதன்முறை. இதற்கு முன்னர், ஒன்றன் பின் ஒன்றாகவே இந்தப் போட்டிகள் நடந்துள்ளன. உலக மாஸ்டர்ஸ் நீச்சல் போட்டியில் கிட்டத்தட்ட 6,000 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனங்கள், சிங்கப்பூர் மக்கள், மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை SG60 நீச்சல் சவாலை எளிதாகப் பங்கேற்க முடியும், இதில் அடிப்படை 60 சுற்றுகள் செய்ய வேண்டும்.
போட்டிகளைச் சார்ந்த முக்கிய அம்சங்கள்
உலக நீச்சல் மாஸ்டர்ஸ் போட்டி:
இந்த மாஸ்டர்ஸ் போட்டி ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறும். சிங்கப்பூரிலுள்ளவர்களும் அனைத்துலக நீச்சல் வீரர்களும் பங்கேற்கலாம். மேல் விவரங்களுக்கு https://www.worldaquatics-singapore2025.com/masters இணையப்பக்கத்தை நாடலாம்.
SG60 நீச்சல் சவால்:
SG60 நீச்சல் சவால் 4 மாதங்களுக்கு நடைபெறும். அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். தேசிய அளவிலான நீச்சல் முனைப்பில் இணைந்து சிங்கப்பூர் நீச்சல் துறைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். GameOn SG60 Community இணைய செயலியைப் பதிவிறக்கம் செய்து பங்குபெறுங்கள்.
கலந்துறவாடல் அம்சங்களுடனான கண்காட்சிகள்:
வணிக மையங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
டீம் நிலாவுடன் தொண்டூழியம்: உங்கள் நேரத்தையும் திறன்களையும் வழங்கி இந்தப் போட்டிகளுக்குத் தோள் கொடுங்கள். swim_team_nila@sport.gov.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி மேலும் அறியுங்கள்.
ஒன்றிணைந்து நினைவிலிருந்து நீங்கா அனைத்துலக விளையாட்டுப் போட்டியாக இந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துவோம்.
மேல் விவரங்களுக்கு https://www.worldaquatics-singapore2025.com/ இணையப்பக்கத்தை நாடலாம்.

