லெஸ்டர் சிட்டி நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோய்

1 mins read
c2926190-3cdc-452d-893d-14e66a263e5f
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் ஆட்டக்காரரான ரூட் வான் நிசல்ரோய், கோல் போடுவதில் சிறந்து விளங்கினார்.   - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி அன்று, தனது அணியின் புதிய நிர்வாகியாக ரூட் வான் நிசல்ரோயை லெஸ்டர் சிட்டி அறிவித்துள்ளது.

நிசல்ரோய் நவம்பரில் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிலிருந்து வெளியேறியதற்கு முன்பு, இடைக்கால நிர்வாகியாக ஒரு குறுகிய காலத்திற்குப் பணியாற்றினார். அதற்கு முன்பு முன்னாள் நிர்வாகி எரிக் டென் ஹாக்கின் உதவி பயிற்றுவிப்பாளராக அவர் இருந்தார்.

லெஸ்டர் சிட்டி காற்பந்துச் சங்கம், 12 பிரிமியர் லீக் ஆட்டங்களுக்குப் பிறகு நவம்பர் 24ஆம் தேதி அதன் நிர்வாகி ஸ்டீவ் கூப்பரை நீக்கியது. அவர் வெளியேறியபோது, ​​லெஸ்டர் சிட்டி புள்ளிப் பட்டியலில் 16வது இடத்தில் இருந்தது.

“நான் பெருமைப்படுகிறேன், நான் உற்சாகமாக இருக்கிறேன். லெஸ்டர் சிட்டி காற்பந்துச் சங்கத்தைப் பற்றி நான் பேசியபோது, அவர்கள் அந்த அணியைப் பற்றி உற்சாகமாகப் பேசினார்கள்,” என்று முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் ஆட்டக்காரரான நிசல்ரோய், லெஸ்டர் சிட்டி காற்பந்துச் சங்க அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“லெஸ்டர் சிட்டி காற்பந்துச் சங்கத்தின் அண்மைய வரலாறு சுவாரஸ்யமாக உள்ளது. நான் தொடங்குவதற்கும், எல்லாரையும் தெரிந்து கொள்வதற்கும், காற்பந்துச் சங்கத்துக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன்,” என்றும் நிசல்ரோய் கூறினார்.

நிசல்ரோய், 48, 2027 ஜூன் வரை லெஸ்டர் சிட்டி அணியின் நிர்வாகியாகப் பணியாற்ற வகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்