பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் (சீ கேம்ஸ்) காற்பந்துப் போட்டியில் வியட்னாம் தங்கம் வென்றுள்ளது.
வியாழக்கிழமை (டிசம்பர் 18) போட்டியின் இறுதியாட்டத்தில் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் தாய்லாந்தை 3-2 எனும் கோல் கணக்கில் வென்றது வியட்னாம்.
கடந்த இரு தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் தாய்லாந்து இறுதியாட்டத்தில் தோல்வியடைந்தது. இவ்வாண்டுப் போட்டியின் இறுதியாட்டத்தில் அதன் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆட்டத்தில் தாய்லாந்து 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது அதற்குக் காரணம்.
ராஜமங்களா தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் தோற்றுக்கொண்டிருந்த வியட்னாம் அபாரமாக மீண்டு வந்து 3-2 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் யாட்சாக்கோர்ன் புராஃபா தாய்லாந்தை முன்னுக்கு அனுப்பினார். பின்னர் அணித்தலைவர் செக்சான் ராட்ரீ அதன் இரண்டாவது கோலைப் போட்டார்.
எனினும், பிற்பாதியாட்டத்தில் வேறு பரிமாணத்தில் களமிறங்கியது வியட்னாம். 49வது நிமிடத்தில் வியட்னாமின் அணித்தலைவர் கையன் டின் பாக் அதன் முதல் கோலைப் போட்டார். பிறகு 60வது நிமிடத்தில் ஃபாம் லை டுக் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரம் வரை சென்றது. 95வது நிமிடத்தில் வியட்னாமின் கையன் தான் நன் வெற்றி கோலைப் போட்டார்.

