பேங்காக்: இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் (சீ கேம்ஸ்) ஆண்கள் நீர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் இருக்கும் தம்மசாட் பல்கலைக்கழக நீர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பரம வைரிகளான இந்தோனீசியாவை 19-16 எனும் கோல் கணக்கில் வென்றது சிங்கப்பூர்.
இது, தென்கிழக்காசிய விளையாட்டுகள் வரலாற்றில் ஆண்கள் நீர்ப்பந்தில் சிங்கப்பூர் வென்றுள்ள 29வது தங்கப் பதக்கமாகும்.
முதல் கால்பாதியாட்டத்தில் பின்னால் இருந்த பிறகு மீண்டு வந்து 8-6 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலை வகித்தது.
இரண்டாம் கால் பாதியாட்டத்தில், 2019ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வாகை சூடியிருந்த இந்தோனீசியா மீண்டு வந்தது. 8-11 என்ற கோல் கணக்கில் பின்னால் இருந்த அது கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.
இரு அணிகளின் விளையாட்டிலும் பதற்றம் தெரிந்தது. இரண்டின் கோல் காப்பாளர்களும் சிறப்பாக விளையாடினர். மூன்றாம் கால்பாதியாட்டத்தில் அதிக கோல்கள் விழவில்லை.
இறுதியில் குறைவான கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது சிங்கப்பூர்.
இவ்வாண்டு விளையாட்டுகளில் ஆண்கள் நீர்ப்பந்துப் போட்டிகளில் முன்னதாக மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய அணிகளை சிங்கப்பூர் வென்றிருந்தது. மலேசியாவை 23-8 என்ற கோல் கணக்கிலும் தாய்லாந்தை 14-13 என்ற கோல் கணக்கிலும் சிங்கப்பூர் வென்றிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
பிலிப்பீன்சை 33-6 எனும் கோல் கணக்கில் வென்று திக்குமுக்காடச் செய்தது.
வருங்காலத்துக்கான அணியை உருவாக்கும் நோக்கில் சிங்கப்பூர் பயிற்றுவிப்பாளர் கான் அயோகி அணியில் பல மாற்றங்களைச் செய்திருந்தார். அந்த வகையில் அணியில் பலர் முதன்முறையாக தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
அணியின் சராசரி வயது 21.
2023ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் வாகை சூடிய சிங்கப்பூர் அணியில் இடம்பெற்ற இருவர் மட்டுமே இவ்வாண்டுக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

