சர்ச்சை, கொந்தளிப்பு; போராடி மகுடம் சூடிய செனகல்

3 mins read
f70242b3-20b9-4cce-a2a2-c371a5c71d2a
கிண்ணம் ஏந்தி கொண்டாடிய செனகல் ஆட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ரபாட்: ஆப்பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்திய மொரோக்கோவை 1-0 எனும் கோல் கணக்கில் செனகல் வீழ்த்தி கிண்ணத்தை ஏந்தியது.

இறுதி ஆட்டத்தில் இரு குழுக்களும் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காமல் வெற்றியை இலக்காகக் கொண்டு போராடின.

இருதரப்பினரும் மாறி மாறி கோல் வேட்டையில் இறங்க, ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்ததை அடுத்து, கூடுதல் நேரம் விளையாடப்பட்டது.

கூடுதல் நேரத்தில் செனகலின் வெற்றி கோலைப் போட்டார் பாப்பே குவாயே.

ஆனால், கூடுதல் நேரத்துக்கு முன்பு, ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோது சர்ச்சைகள் வெடித்தன.

ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் செனகல் கோல் போட்டது. ஆனால், கோல் போட்ட ஆட்டக்காரர் பந்தைத் தலையால் முட்டி அதை வலைக்குள் அனுப்பியதற்கு முன்பு மொரோக்கோ தற்காப்பு ஆட்டக்காரரைக் கீழே தள்ளிவிட்டதாக நடுவர் தெரிவித்தார்.

இதனால் செனகல் போட்ட அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 98வது நிமிடத்தில் மொரோக்கோவின் நட்சத்திர ஆட்டக்காரர் பிரஹிம் டியாஸ், செனகலின் பெனால்டி எல்லைக்குள் இருந்தபோது செனகல் தற்காப்பு ஆட்டக்காரர் அல் ஹாஜி மாலிக் டியோஃப் அவரை இழுத்து கீழே விழச் செய்தார்.

நடுவர் முதலில் இதைக் கவனிக்கவில்லை.

ஆனால், இதுகுறித்து டியாஸ் அதிருப்திக் குரல் எழுப்பி சத்தம் போட்டதும், காணொளிப் பதிவை நடுவர் ஆராய்ந்தார்.

அவர் காணொளியை ஆராய்ந்துகொண்டிருந்தபோதே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது, கொந்தளிப்பு ஏற்பட்டது.

நடுவர் மொரோக்கோவுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கியபோது விளையாட்டரங்கில் கூடியிருந்த மொரோக்கோ ஆதரவாளர்கள் கொண்டாடத் தொடங்கினர். செனகல் ஆதரவாளர்கள் கோபக் குரல் எழுப்பினர்.

செனகல் ஆட்டக்காரர்கள் எவ்வளவோ எதிர்ப்பு தெரிவித்தும் நடுவர் தமது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

திடலிலிருந்து வெளியேறும்படி தமது ஆட்டக்காரர்களுக்கு செனகல் பயிற்றுவிப்பாளர் பாப்பே பவுனா தியாவ் உத்தரவிட்டார்.

அதன்படி, செனகல் ஆட்டக்காரர்கள் திடலிலிருந்து வெளியேறினர்.

இருப்பினும், கிட்டத்தட்ட 14 நிமிடங்கள் கழித்து அவர்கள் திடலுக்குத் திரும்பினர்.

பெனால்டி வாய்ப்புக்காக முறையிட்டிருந்த டியாஸ் அதை எடுத்தார்.

அவர் கோல் போட்டால் மொரோக்கோவுக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலை நிலவியது.

ஆனால், யாரும் நினைத்துப் பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.

‘பெனென்கா முறை’ பெனால்டிக்கு முயன்ற டியாஸ், பந்தை வலுவாக உதைக்காமல் அதை தரையிலிருந்து சற்று உயரமாக எழும்பும்படிச் செய்தார். ஆனால், தேவையான வேகம் அதில் இல்லாமல் போனது. மேலும், செனகல் கோல்காப்பாளர் வலது பக்கம், இடது பக்கம் பாயாமல் கோல் கம்பங்களுக்கு நடுவில் நின்றுகொண்டிருந்ததால் பந்து நேராக அவரது கைகளுக்குச் சென்றது.

வெற்றி பெற கிடைத்த பொன்னான வாய்ப்பை மொரோக்கோ நழுவவிட்டது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல கூடுதல் நேரத்தில் செனகல் அபாரமான முறையில் கோல் போட்டு வாகை சூடியது.

பாப்பே குவாயே அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் அனைவரையும் கடந்து சென்று வலையைத் தீண்டியது.

இறுதி வரை மொரோக்கோவால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போனதை அடுத்து, செனகல் வெற்றி பெற்று கொண்டாட்ட மழையில் நனைந்தது.

கிண்ணம் வழங்கும் விழா நிறைவுபெற்றதை அடுத்து, ஆட்டத்துக்குப் பிறகு நடத்தப்படும் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொள்ள செனகல் பயிற்றுவிப்பாளர் தியாவ் அறைக்குள் நுழைந்தபோது அங்கு கூடியிருந்த மொரோக்கோ செய்தியாளர்கள் அவரைத் தூற்றினர்.

அதிகாரிகள் அவர்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதையடுத்து, தியாவ் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு காட்டும் விதமாகத் திடலிலிருந்து வெளியேறும்படி தமது ஆட்டக்காரர்களுக்கு உத்தரவிட்ட தியாவ்வுக்கு மிகக் கடுமையான தண்டனையை ஆப்பிரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்