தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டாம் முறையும் கைநழுவிய அரையிறுதி வாய்ப்பு

2 mins read
dafcdfed-967f-4e95-a586-ee97ace47b0d
ஒலிம்பிக் அரையிறுதிக் கனவு நனவாகாத சோகத்தில் சாந்தி பெரேரா. - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

சிங்கப்பூர்த் திடல்தட நட்சத்திர விளையாட்டாளர் சாந்தி பெரேரா பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 5) நடந்த ‘ரெபஷாஜ்’ முதலாவது தகுதிச் சுற்றில் சாந்தியுடன் சேர்த்து எழுவர் கலந்து கொண்டனர். அதில், 23.45 நொடிகளை எடுத்துக்கொண்டு போட்டியைக் கடைசி நிலையில் முடித்ததால் சாந்தியின் அரையிறுதிக் கனவு கைகூடவில்லை.

தகுதிச் சுற்றின்மூலம் அரையிறுதிக்கு முன்னேறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளில் ‘ரெபஷாஜ்’ முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அம்முறையின்கீழ் நடத்தப்படும் நான்கு தகுதிச் சுற்றுகளின் வெற்றியாளர்களும், அவர்களுக்குப்பின் அதிவிரைவாக ஓடிய மேலும் இருவரும் அரையிறுதிக்கு முன்னேறுவர்.

முதலாவது தகுதிச் சுற்றில் 23.21 நொடிகளில் 200 மீட்டர் தொலைவை ஓடிக் கடந்திருந்தார் 27 வயதான சாந்தி பெரேரா. ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் சுற்றில் ஒட்டுமொத்தத்தில் 45 பேர் போட்டியிட, அதில் 31ஆம் நிலையில் முடித்தார் சாந்தி.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆசிய வெற்றியாளர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்ற சாந்திக்கு நடப்பு ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக அமையவில்லை.

முன்னதாக, இம்மாதம் 2ஆம் தேதி நடந்த 100 மீட்டர் ஓட்டத்திலும் தகுதிச் சுற்றுடன் அவர் வெளியேறினார். 11.63 நொடிகளில் 100 மீட்டரைக் கடந்த அவர், ஒட்டுமொத்தமாக 72 போட்டியாளர்களில் 55ஆம் இடத்தைப் பிடித்தார்.

முன்னதாக, 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் களமிறங்கிய சாந்தி, 200 மீட்டர் ஓட்டத்தில் மட்டும் பங்கேற்றார். அப்போது, பந்தயத் தொலைவைக் கடக்க அவர் 23.96 நொடிகளை எடுத்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்