சிங்கப்பூர், இந்தியக் காற்பந்து அணிகள் வியாழக்கிழமை (அக்டோபர் 9) இரவு 7.30 மணிக்கு தேசிய விளையாட்டரங்கில் பொருதவுள்ளன.
சவூதி அரேபியாவில் 2027ல் நடைபெறவுள்ள ஏஎஃப்சி ஆசியக் கிண்ணத்துக்குத் தகுதிபெற இரு அணிகளும் இரு-சுற்று ஆட்டத்தில் மோதுகின்றன.
முதல் சுற்று சிங்கப்பூரிலும் இரண்டாம் சுற்று அக்டோபர் 14ஆம் தேதி இந்தியாவின் கோவா நகரிலும் நடைபெறும்.
சிங்கப்பூர் (லயன்ஸ்) அணியின் இடைக்காலத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேவின் லீ, இக்கிண்ணத்துக்குச் சிங்கப்பூர் அணியை வழிநடத்தும் முதல் போட்டி இது. முந்தைய பயிற்றுவிப்பாளர் சுடோமு ஒகுரா அமைத்த அடித்தளத்தைப் பயன்படுத்தி அணியை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வது அவரது நோக்கம்.
ஜூன் 10ஆம் தேதி போட்டியில் பங்ளாதேஷை 2-1 என வீழ்த்திய ‘லயன்ஸ்’, தற்போது ‘சி’ குழுவில் முதலிடத்தில் நான்கு புள்ளிகளுடன் உள்ளது.
இரண்டாம் நிலையிலுள்ள ஹாங்காங் அணிக்கும் நான்கு புள்ளிகள் இருந்தாலும், கோல் கணக்கில் சிங்கப்பூர் முன்னிலையில் உள்ளது. மூன்றாம் நிலையில் பங்ளாதேஷும் நான்காம் நிலையில் இந்தியாவும் தலா ஒரு புள்ளியுடன் உள்ளன. ஜூன் 10ஆம் தேதி நடந்த போட்டியில் ஹாங்காங்கிடம் இந்தியா 0-1 எனத் தோற்றது.
குழுவின் வெற்றியாளர் சவூதி அரேபியாவுக்குத் தகுதிபெறும் நிலையில் வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் லயன்ஸ் (ஃபிஃபா நிலை: 158) இந்திய அணியை (ஃபிஃபா நிலை: 134) வீழ்த்தினால் சிங்கப்பூரின் நிலை வலுவடையும்.
“இந்தியாவுக்கு எதிரான இரு போட்டிகளுக்காக நாங்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் எங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டோம்,” என்றார் பயிற்றுவிப்பாளர் லீ.
தொடர்புடைய செய்திகள்
லயன்ஸ் அணியின் தலைவர் ஹாரிஸ் ஹருண், காயமடைந்ததால் செப்டம்பர் மாதப் பயிற்சியில் பங்கேற்கவில்லை.
‘யங் லயன்ஸ்’ விளையாட்டாளர் ஓங் யு என், 22, போர்ச்சுகலின் ‘எஃப்சி விசெலா’ அணியில் விளையாடும் ஜோனன் டான், 19, ஆகியோர் முதன்முறையாக ‘லயன்ஸ்’ சீனியர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் மீண்டும் இணையும் சுனில் சேட்ரி அந்த அணிக்கு வலுச்சேர்க்கும் அம்சம். அண்மைய காஃபா நேஷன்ஸ் கிண்ணத்தில் வெண்கலம் வென்றதால் புத்துணர்ச்சி பெற்றுள்ள இந்திய அணி, வெற்றியடைய முனைந்துள்ளது. “வெளிநாட்டில் வெல்வது எளிதாக இருக்காது. பொறுமையாக, சூழலுக்கேற்ப விளையாட வேண்டும்,” என்றார் இந்தியாவின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் காலித் ஜமீல்.
போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளை $16 முதல் $41 வரை செலுத்தி https://premier.ticketek.com.sg/shows/show.aspx?sh=SVI6151 எனும் இணையத்தளத்தில் வாங்கலாம்.