நகர்ப்புற விளையாட்டுகள்மூலம் சமூகத்தை இணைத்த சிங்கப்பூர்

3 mins read
3ebc8094-6806-4ea8-a2ae-0ddb3c87e484
‘வோர்ல்டு ரோவிங் சூப்பர்60 சிங்கப்பூர்’ உட்புறப் படகோட்டப் போட்டியில் போட்டியிட்ட விஹான் ஜஸ்வால். - படம்: வோர்ல்டு ரோவிங் சூப்பர்60 சிங்கப்பூர்

சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சி விழாவின் இரண்டாம் பதிப்பு நவம்பர் 14 முதல் 30ஆம் தேதிவரை நடைபெற்றது.

மூன்று வார இறுதிகளில் 90,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் பார்வையாளர்களும் தீவு முழுவதும் நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். இது சென்ற ஆண்டைவிட 30% அதிகம்.

இவ்வாண்டின் விழாவில் அறிமுகமான பத்து புதிய நடவடிக்கைகளில் ஒன்று, ‘வோர்ல்டு ரோவிங் சூப்பர்60 சிங்கப்பூர்’ எனும் சிங்கப்பூரின் முதல் பெரிய அளவிலான உட்புறப் படகோட்ட இயக்கம். 60 நாள்களில், தீவின் வெவ்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் படகோட்ட 60 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அனைத்துலகப் போட்டி அங்கமும் இடம்பெற்றது.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) படகோட்ட அணியின் தலைவரும் தேசிய வளர்ச்சி அணி உறுப்பினருமான விஹான் ஜஸ்வால், 22, முதன்முறையாக இவ்விழாவில் கலந்துகொண்டு தன் சொந்த சாதனையை முறியடித்தார். சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் இலக்கை நோக்கிச் செயல்படும் அவர், உலகளவிலான போட்டிகளில் இன்னும் அதிகமாகப் பங்கேற்க விரும்புகிறார்.

“தற்போது தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் படகோட்டம் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆயினும், கென்ட் ரிட்ஜ், காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இதன் தொடர்பில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுவருகிறோம்,” என்றார் விஹான்.

பயில்வான் போட்டிகளில் அதிகாரியாகச் செயல்பட்ட பெண்மணி

‘ஸ்ட்ராங்மேன் கேம்ஸ்’ எனும் அனைத்துலகப் பயில்வான் போட்டிகளில் பங்கேற்றுவரும் சுகந்தி, சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சி விழாவில் அதிகாரியாகப் பங்காற்றினார்.
‘ஸ்ட்ராங்மேன் கேம்ஸ்’ எனும் அனைத்துலகப் பயில்வான் போட்டிகளில் பங்கேற்றுவரும் சுகந்தி, சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சி விழாவில் அதிகாரியாகப் பங்காற்றினார். - படம்: லிஃப்டன் சீனா ஸ்ட்ராங்கஸ்ட்

‘எக்ஸ்டிங்க்ட் கேம்ஸ்’ (Extinct Games) எனப் பயில்வான்கள் போட்டியிடும் விளையாட்டுகளில் முதன்முறையாக அதிகாரியாகப் பங்கேற்றார் சுகந்தி, 34.

கடந்த ஈராண்டுகளாகச் சுகந்தி உலகளவில் பயில்வான் போட்டிகளில் போட்டியிட்டுவருகிறார். ‘அஃபிஷியல் ஸ்ட்ராங்மேன் கேம்ஸ்’சுக்கு அவர் தகுதிபெற்றுள்ளார். அதனால், எத்தகைய சூழலையும் கையாளும் திறன் தமக்கு உள்ளது எனும் தன்னம்பிக்கையுடன் போட்டி அதிகாரியாகச் செயல்பட வந்த அழைப்பை ஏற்றார் சுகந்தி.

“உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுவீரர்களை நேரில் காண்பது அரிய வாய்ப்பு. முடிந்தால் மறுபடியும் இதைச் செய்வேன்,” என்றார் சுகந்தி.

குத்துச்சண்டையில் ஆர்வம் வளர்க்கும் ‘ஸ்பார்டன்ஸ்’

ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றம் முதன்முறையாக விழாவில் பங்கேற்று, குத்துச்சண்டைப் போட்டியையும் பயிலரங்குகளையும் நடத்தியது.

ஜூரோங் வெஸ்ட் ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் விக்டரினோ, சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சி விழாவின்போது பொதுமக்களுக்குக் குத்துச்சண்டை கற்றுத் தந்தார்
ஜூரோங் வெஸ்ட் ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் விக்டரினோ, சிங்கப்பூர் நகர்ப்புற விளையாட்டு, உடற்பயிற்சி விழாவின்போது பொதுமக்களுக்குக் குத்துச்சண்டை கற்றுத் தந்தார் - படம்: ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றம்

“வழக்கமாக ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றங்ளுக்கே போட்டிகளை நடத்துவோம். முதன்முறையாக, சிங்கப்பூரிலுள்ள அனைத்துக் குத்துச்சண்டை மன்றங்களையும் வரவேற்றோம். எங்கள் ஃபிலிப்பீன்ஸ் கிளையிலிருந்துகூட ஒரு குத்துச்சண்டை வீரர் கலந்துகொண்டார். தாய்லாந்திலிருந்து ஒரு பெண் குத்துச்சண்டை வீரரும் நம் சிங்கப்பூர்க் குத்துச்சண்டை வீரருடன் போட்டியிட்டார்,” என்று ஜூரோங் வெஸ்ட் ஸ்பார்ட்டன்ஸ் குத்துச்சண்டை மன்றத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் குத்துச்சண்டை மன்ற மேலாளருமான ரி‌ஷி அரிவின் விக்டரினோ, 28, தெரிவித்தார்.

தந்தையின் தாக்கத்தால் ஐந்து வயதில் குத்துச்சண்டையிடத் தொடங்கிய விக்டரினோ, ஒருமுறை ஏற்பட்ட பலமான காயத்தினால் அதை நிறுத்தவேண்டியதாயிற்று. அப்போது தந்தை நடத்தும் குத்துச்சண்டை வகுப்புகளில் உதவத் தொடங்கிய அவர், கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தந்தையின் குத்துச்சண்டை மன்றத்தில் பயிற்றுவிப்பாளராக உள்ளார்.

சொந்த எடைமூலம் உடற்கட்டை மேம்படுத்துதல்

‘டிஃபை கிரேவிட்டி’ (Defy Gravity) எனப்படும் சிங்கப்பூரின் முதல் ஒருங்கிணைந்த கேலிஸ்தெனிக்ஸ் (Unified Calisthenics) போட்டிகளில் பங்காற்றினர் மாணவர்கள் ஜி‌தேஷ் ஜானக் தர்யனானி, சிங்காரவேலன் ஸ்ரீபிரியன், சிட்டாழி நிவேதித் நந்தகுமார். கேலிஸ்தெனிக்ஸ் என்பது சொந்த உடல் எடையைக் கொண்டே உடலை வலுப்படுத்தும் ஒருவிதப் பயிற்சி.

கேலிஸ்தெனிக்ஸ்.
கேலிஸ்தெனிக்ஸ். - படம்: ஆக்டிவ்எஸ்ஜி

போட்டி நெறியாளரான ஜி‌தேஷ், 21, உற்சாகமாகப் போட்டியை வழிநடத்தினார். அவர் தாமே ஒரு விளையாட்டு வீரரும்கூட; மிதிவண்டி ஓட்டுதலில் சிங்கப்பூரின் தேசிய வளர்ச்சி அணியில் 2021 முதல் 2022 வரை இருந்தவர். தன் உடலைச் சமமாக வலுப்படுத்த அவர் தன் பயிற்சியில் கேலிஸ்தெனிக்சை உட்புகுத்தினார். இதற்கென ஒரு சமூகமும் உள்ளது என்பதை நாளடைவில் அவர் அறிந்துகொண்டார். “உடற்கட்டோடு இருப்பது எளிதானது என்றும் சொந்த உடல் எடைமூலம் உடல்நலத்தை மேம்படுத்தலாம் என்றும் காட்ட விரும்புகிறேன்,” என்றார் அவர்.

ஸ்ரீபிரியன், 21, உடற்பயிற்சிக்கூடப் பயிற்சியை உயர்நிலைப் பள்ளியிலேயே தொடங்கினார். அவர் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கேலிஸ்தெனிக்ஸ் பயிற்சி மேற்கொண்டார்; யூடியூப் மூலம் புதிய திறன்களைக் கற்று, 2022ல் சமூகப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். “பெருங்கூட்டங்களுக்கு முன்னிலையில் என் திறன்களைக் காட்டியது மெய்சிலிர்க்கும் அனுபவம். எதிர்காலத்தில் நான் பிறருக்கும் பயிற்சி வழங்குவேன்,” என்றார் ஸ்ரீபிரியன்.

விழாவில் தொண்டூழியராகவும் ஆதரவாளராகவும் பங்காற்றினார் முன்னாள் என்யுஎஸ் கேலிஸ்தெனிக்ஸ் துணைத் தலைவரான நிவேதித், 20. “சிங்கப்பூருக்கு நான் வந்ததிலிருந்து இங்கு கேலிஸ்தெனிக்ஸ் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதைக் காணும்போது வியப்பாக உள்ளது. இதற்குமுன் என் முதல் கேலிஸ்தெனிக்ஸ் போட்டியான டிஃபை கிரேவிட்டி: சேப்டர் ஜீரோ’வில் நான் போட்டியிட்டேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்