சிங்கப்பூர் அனைத்துலக உருட்டுப்பந்துப் பொதுவிருதுப் போட்டியின் பெண்கள் ஒற்றையர்ப் பிரிவில் வாகை சூடியுள்ளார் சிங்கப்பூர் வீராங்கனை எரியேன் டே.
அமெரிக்காவில் ஒரு போட்டியில் பங்கேற்ற பிறகு சென்ற வாரம்தான் நாடு திரும்பினார் டே. அதனால் இப்போட்டிக்குத் தயார் செய்யப் போதுமான நேரம் இல்லாமல் இருக்கக்கூடும் என்று டே அஞ்சினார்.
ஆனால் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) 245-176, 244-193 எனும் ஆட்டக் கணக்கில் டே, மலேசியாவின் லவினியா கோவை வீழ்த்தி கிண்ணத்தை வென்று அச்சத்தை உதறித் தள்ளினார். மூன்றாவது முறையாக மூத்த வீரர்களுக்கான ஒற்றையர்ப் பிரிவில் வாகை சூடியிருக்கிறார் டே.
போட்டியில் தான் விளையாடிய விதம் மகிழ்ச்சியளித்தாலும் தன்னால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும் என்று டே குறிப்பிட்டார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற மலேசிய அனைத்துலகப் பொதுவிருதுப் போட்டியில் டே தகுதிச் சுற்றைத் தாண்டத் தவறினார். அது, உருட்டுப்பந்து விளையாட்டில் எதையும் கணிக்க முடியாததை எடுத்துக்காட்டுவதாக அவர் சுட்டினார்.
கடந்த மூன்று உருட்டுப்பந்துப் போட்டிகளில் இரண்டாவதாக வந்த 20 வயது டேக்கு இந்த வெற்றி ஒருவகை சாதனையாக விளங்குகிறது.

