சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தக்கயுகி நிஷிகாயா விலகிவிட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) அறிவித்தது.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார் 50 வயது நிஷிகாயா. தேசிய அணியின் இரண்டாவது ஜப்பானியப் பயிற்றுவிப்பாளரான அவர், ஈராண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டார்.
நிஷிகாயாவின் காலத்தில் சிங்கப்பூர் அணி 21 ஆட்டங்களில் விளையாடியது. அவற்றில் எட்டு ஆட்டங்களில் தேசிய அணி வெற்றி பெற்றது; எட்டில் தோல்வியும் ஐந்தில் சமநிலையும் கண்டது.
இதனிடையே, இன்னொரு ஜப்பானியரான சுடோமு ஒகுரா, 57, சிங்கப்பூர் தேசிய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
ஒகுரா, 2006 முதல் 2010 வரை ஜப்பானிய தேசிய அணியின் துணைப் பயிற்றுவிப்பாளாராகச் செயல்பட்டவர். பின்னர் 2010 முதல் 2012 வரை ஜப்பானிய ஒலிம்பிக் குழுவின் துணைப் பயிற்றுவிப்பாளராகவும் அவர் இருந்தார்.