தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் யு-21 வலைப்பந்து அணிக்கு ஆசிய இளையர் வெற்றியாளர் பட்டம்

2 mins read
4a853ac5-23a9-4062-ad76-5c196dfb3a2b
2017க்குப் பிறகு முதல்முறையாக தங்கப் பதக்கத்தை சிங்கப்பூர் அணி வென்றது. - படம்: வலைப்பந்து சிங்கப்பூர்

2023ல் தென்கொரிய நகரமான ஜியோன்ஜுவில் நடைபெற்ற ஆசிய இளையர் வலைப்பந்து வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான மலேசியாவிடம் 49-45 என்ற கணக்கில் சிங்கப்பூர் 21 வயதுக்குட்பட்டோர் (யு-21) அணி தோல்வியடைந்ததால், பட்டத்தை மீண்டும் வெல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஆனால், ஈராண்டுகளுக்கு முன்பு தோல்வியடைந்த அதே ஜியோன்ஜு ஹவாசன் உடற்பயிற்சிக்கூடத்தில், ஜூலை 4ஆம் தேதி சிங்கப்பூர் அணி மீண்டெழுந்து, அதே எதிரணியான மலேசியாவை 49-29 என்ற கணக்கில் தோற்கடித்தது. 2017க்குப் பிறகு முதல்முறையாக தங்கப் பதக்கத்தை அணி வென்றுள்ளத்து.

இறுதிப் போட்டியில் சிங்கப்பூர், மலேசிய அணிகள் சந்தித்திருப்பது இது நான்காவது முறை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வெற்றிபெற்று இருந்த நிலையில், 2019லும் 2023லும் மலேசியாவிடம் தோல்வியடைந்தது.

மலேசியா ஒரு சவாலான அணி என்பதால் தாங்கள் வெற்றிபெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிங்கப்பூர் அணியின் இணைத் தலைவர் நோரா கேப்ரியல் கூறினார்.

மேலும், “நாங்கள் எங்கள் சொந்த ஆட்டத் திட்டத்திலும் எங்கள் சொந்த செயல்முறையிலும் மட்டுமே கவனம் செலுத்தினோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இது சிங்கப்பூர் அணிக்கு ஓர் ஆக்கபூர்வமான தொடக்கத்தைப் பெற போதுமானதாக இருந்தது. அதன் பிறகு அது தனது அனுகூலத்தை உறுதிப்படுத்திக்கொண்டது.

குழுப் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கப்பூர் அணி, இந்தியாவை (76-29), மலேசியாவை (47-30), ஹாங்காங்கை (65-19), இலங்கையை (63-19) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மலேசியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில், சிங்கப்பூர் அணி சிறிது ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, அடுத்த பெரிய போட்டிக்குத் தயாராகும். வலைப்பந்து உலக இளையர் கிண்ணம் செப்டம்பர் 19 முதல் 28 வரை ஜிப்ரால்டரில் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்