தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் தென்கிக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூரின் தங்க மகள் சாந்தி பெரேரா, பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
சுப்பாச்சலாசாய் தேசிய விளையாட்டரங்கில் பந்தயம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இரவு நடைபெற்றது.
29 வயது சாந்தி பெரேரா, 11.37 வினாடியில் அதனை முடித்து வெற்றிக்கனியைப் பறித்தார். தாய்லாந்தின் கானோன்டா ஜிராபாத் (11.54) இரண்டாம் இடத்திலும் வியட்னாமின் ஹா தி து (11.58) மூன்றாம் நிலையிலும் வந்தனர்.
2023ஆம் ஆண்டு தென்கிழக்காசியப் போட்டிகளில் அவர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றபோது எடுத்துக்கொண்ட நேரம் 11.41 வினாடி. அதே போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் சாந்தி பெரெரா தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தாய்லாந்தின் பூரிப்போன் பூன்சோன் வாகை சூடினார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் 10.00 வினாடி. இந்தோனீசியாவின் லாலு ஸோரி (10.25) இரண்டாம் நிலையில் வந்தார். மலேசியாவின் டேனிஷ் இஃப்திகார் ரோஸ்லீ (10.26) மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
சிங்கப்பூரின் மார்க் பிரையன் லூயிஸ் வெற்றிபெறத் தவறினார். அவர் பந்தயத்தில் நான்காவதாக வந்தார். அவர் 10.32 வினாடியில் போட்டியை முடித்தார்.

