பட்டாயா: சிங்கப்பூரின் ஒலிம்பிக் பதக்க வீரர் மேக்சிமிலியன் மெய்டர், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2025ல் ‘கைட்ஃபோயிலிங்’ அலையாடலில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜோம்தியென் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) போட்டி நடைபெற்றது. போட்டியில் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில் மெய்டர் வெற்றி வாகை சூடினார்.
மூன்று நாளில் நடந்த 12 சுற்றுகளிலும் அவர் முதலிடத்தில் வந்தார். அடுத்த நிலையில் உள்ளவர்கள் எட்டிப் பிடிக்க முடியாத இடத்தில் மெய்டர் தங்கம் பெறுவது உறுதியானது.
தற்போதைய நிலவரப்படி, தாய்லாந்தின் ஜோசஃப் வெஸ்டன் இரண்டாம் இடத்திலும் பிலிப்பீன்சின் வார்னர் ஜனாயா, இந்தோனீசியாவின் வாயான் விரனாதா ஆகியோர் அடுத்தடுத்த நிலைகளிலும் உள்ளனர்.
19 வயது மெய்டர் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவ்வாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சிங்கப்பூர் விளையாட்டு விருதுகளில் அவர், ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ பட்டத்தையும் பெற்றார்.
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கைட்ஃபோயிலிங் அலையாடல் போட்டி சேர்த்துக்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை.
சிங்கப்பூர் இம்முறை படகோட்டப் பந்தயங்களில் ஏற்கெனவே மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

