நீச்சலில் புதிய சாதனை படைத்த சிங்கப்பூரின் இளம் புயல்

நீச்சலில் புதிய சாதனை படைத்த சிங்கப்பூரின் இளம் புயல்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

22 Sep 2026 - 7:27 pm

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் நீச்சல் வீரர் ரஸ்சல் பாங் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) நடைபெற்ற ஆடவருக்கான 1,500 மீட்டர் எதேச்சை நீச்சல் ‘பி’ இறுதிச் சுற்றில் அவர் கலந்துகொண்டார்.

அந்தப் போட்டியை ரஸ்சல் 15 நிமிடம் 22.16 வினாடிகளில் முடித்து இரண்டாமிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.

கத்தார் வீரர் சாடெடின் 15 நிமிடம் 21.33 வினாடிகளில் பந்தயத்தை முடித்து முதலிடத்தைப் பிடித்தார்.

16 வயது மாணவரான ரஸ்சல், கடந்த 9 மாதங்களில் படைக்கும் மூன்றாவது தேசிய சாதனை இதுவாகும்.

இதற்குமுன் கடந்த டிசம்பரில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், ஜூலையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் சிறப்பான நேரத்தைப் பதிவு செய்திருந்தார்.

அத்துடன், ஆடவருக்கான 800 மீட்டர் நீச்சலிலும் இவரே தேசிய சாதனைக்குச் சொந்தக்காரர்.

தேசிய அணி வீராங்கனையான கான் சிங் ஹுவீ தனக்குப் பெரும் ஊக்கமளித்ததாக ரஸ்சல் கூறினார். மேலும், சீனாவின் குன்மிங்கில் 28 நாள்கள் கலந்துகொண்ட பயிற்சி முகாம் தனக்குப் பெரிதும் உதவியதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்