தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் 2025 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கின.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) இரவு ஆடல், பாடல், கலாசார உடைகளில் உலா வருவது, கண்கவர் ஒளி நிகழ்ச்சி எனத் தொடக்க விழா ராஜமங்களா தேசிய விளையாட்டரங்கில் களைகட்டியது.
‘சீ கேம்ஸ்’ என்று அழைக்கப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனீசியா, வியட்னாம், பிலீப்பீன்ஸ் உள்ளிட்ட 11 தென்கிழக்காசிய நாடுகள் போட்டியிடுகின்றன.
திடல்தடப் போட்டிகள், காற்பந்து, கபடி, குத்துச்சண்டை, கராத்தே, வலைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் என 50 விளையாட்டுகளில் 12,000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
சிங்கப்பூர் சார்பில் 930 போட்டியாளர்கள் 48 விளையாட்டுகளில் களமிறங்குகின்றனர்.
அவர்களில் 551 பேர் முதல்முறையாக சீ கேம்சில் பங்கேற்கின்றனர்.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘சீ கேம்ஸ்’, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி நிறைவடைகின்றன. கடைசியாக 2023ஆம் ஆண்டு நடந்த இப்போட்டியில் சிங்கப்பூர் 158 பதக்கங்களை வென்றது. அவற்றில் 51 தங்கப் பதக்கங்கள்.

