33வது தென்கிழக்காசியப் போட்டி அடுத்த மாதம் தாய்லாந்தில் நடக்கவுள்ளது. சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதிக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தென்கிழக்காசியப் போட்டிகளில் முதல்முறையாகக் கபடி சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஆண்கள் அணியை முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் விஷ்வா தேவா, 25, வழிநடத்துகிறார்.
அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெருமையாக உள்ளது என்று விஷ்வா சிஎன்ஏ ஊடகத்திடம் கூறினார். அணித் தலைவர் என்பது கடுமையான பணி. மேலும் முதல்முறையாகச் சிங்கப்பூரை வழிநடத்துவது கூடுதல் சுமையையும் கொடுக்கிறது என்றார் அவர்.
“தென்கிழக்காசியப் போட்டிக்குத் தகுதிபெற கடுமையாகப் போராடினோம். சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்திடம் அனுமதி கேட்டோம். போட்டியில் கலந்துகொள்வதற்கு கபடி அணிக்குத் திறமை உள்ளது என்பதை எடுத்துக்காட்டினோம்,” என்றார் விஷ்வா.
ஆண்கள் அணியில் இருப்பவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் அல்லது இளவயது ஊழியர்கள்.
“கபடி விளையாடுவதில் வெளிநாட்டு ஊழியர்கள் சிறந்தவர்கள். அவர்களுடனும் நட்பு ரீதியாக விளையாடி பயிற்சி மேற்கொண்டோம்,” என்று விஷ்வா கூறினார்.
ஏழு பேர் குழு மற்றும் ஐவர் அல்லது மூவர் குழுவாக இருக்கும் கபடி விளையாட்டுகள் தென்கிழக்காசியப் போட்டிகளில் இடம்பெற்றுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தாய்லாந்து, இந்தோனீசியா, மலேசியா உள்ளிட்ட அணிகளுடன் மோதியது. அந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துலக அளவில் கபடியில் முத்திரை பதிக்க சிங்கப்பூர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
வெளிநாட்டு ஊழியர்களிடம் பிரபலமாக உள்ள கபடி தற்போது பள்ளிகளிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் கபடி அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது பெண்கள் அணியும் களம்காண்கிறது.

