சிங்கப்பூரின் முதல் வெளிநாட்டு ஊழியர் கடல்நாகப் படகோட்டக் (dragon boating) குழு, அமைக்கப்பட்டு இரண்டே மாதங்களுக்குள் இரண்டாவது போட்டியில் பங்கேற்றுள்ளது.
டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூ (Transient Paddlers Count Too) எனும் அந்த 12 பேர் குழுவில் வெளிநாட்டு ஊழியர்களும் இல்லத்துப் பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். சனிக்கிழமையன்று (செப்டம்பர் 14) காலாங்கில் இருக்கும் நீர் விளையாட்டு நிலையத்தில் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஐஎச்எச் ஹெல்த்கேர் சீ ரெகாட்டா 2024 (IHH Healthcare Singapore Sea Regatta 2024) அனைத்துலக கடல்நாகப் படகோட்டப் போட்டிகளில் அக்குழு பங்கேற்றது. இந்த இரண்டு நாள் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) நிறைவடையும்.
முதல் போட்டியில் டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூ இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதிபெறத் தவறியது. ஆனால், இம்முறை 150 மீட்டர் பிரிமியர் ஓப்பன்ஸ் (Premier Opens) பிரிவில் அரையிறுதி வரை சென்றது. ஞாயிற்றுக்கிழமையன்று கடல்நாகப் படகோட்டம், ஓட்டம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இருவகை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும்.
டிரான்சியன்ட் வொர்க்கர்ஸ் கவுன்ட் டூ (TWC2) எனும் லாபநோக்கில்லா அமைப்பு டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூ குழுவைத் தொடங்கியது. அது, கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் உள்ளூர் விளையாட்டு விழாவான பெஸ்டா சுக்கானில் பங்கேற்றது.
அக்குழு பங்கேற்ற முதல் போட்டி அது. இத்தகவலை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட பிறகு டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூ பலரின் கவனத்தை ஈர்த்தது.
அந்தப் போட்டியை முன்னிட்டு குழு ஓராண்டுக்கு வாரந்தோறும் தங்களின் ஒரே ஓய்வு நாளில் கடுமையாகப் பயிற்சி செய்தது. டிரான்சியன்ட் வொர்க்கர்ஸ் கவுன்ட் டூ அமைப்பின் 20,000 வெள்ளி நிதி ஆதரவுடன் அந்தப் போட்டியில் குழு பங்கேற்றது.
அந்தத் தகவல் ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர் (IHH Healthcare Singapore) எனும் தனியார் சுகாதாரப் பராமரிப்பு குழுமத்தின் கவனத்தை ஈர்த்தது. அந்த அமைப்புதான் ஐஎச்எச் ஹெல்த்கேர் சீ ரெகாட்டா 2024 போட்டியின் முக்கிய ஆதரவாளர் அமைப்பாகும்.
தொடர்புடைய செய்திகள்
ஐஎச்எச் ஹெல்த்கேர் சீ ரெகாட்டா 2024 போட்டிகளில் பங்கேற்க ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர், டிரான்சியன்ட் பேட்லர்ஸ் கவுன்ட் டூவிற்கு மொத்தம் 3,000 வெள்ளி நிதி ஆதரவு வழங்கியது. கிலெனீகல்ஸ், மவுன்ட் எலிசபெத், பார்க்வே மருத்துவமனைகள் ஆகியவை அந்த அமைப்பின்கீழ் செயல்படுகின்றன.

