பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் (பாராலிம்பிக்) பங்கேற்ற சிங்கப்பூர் வீரர்கள் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 14) சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் பேருந்தின் மேல் ஊர்வலமாகச் சென்றனர்.
சுமார் 3,000 பேர் திரண்டு வீரர்களை வரவேற்றனர். வீரர்களை நினைத்துத் தாங்கள் மிகவும் பெருமைப்படுவதாகவும் பலர் கூறினர்.
தங்கமகள் யிப் பின் சியூ உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட பேருந்து, காலை சுமார் 11.30 மணியளவில் ஓசிபிசி நீர் விளையாட்டு நிலையத்திலிருந்து புறப்பட்டது. வீரர்களை வரவேற்பதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பகுதிகள் வழியே பேருந்து சென்றது.
சைனாடவுன், ஆர்ச்சர்ட் சாலை, சிராங்கூன் சாலை, விக்டோரியா ஸ்திரீட் ஆகியவற்றின்வழி பேருந்து சென்றது.
சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து 10 சிங்கப்பூர் வீரர்களும் பேருந்தின்மேல் இருந்தனர். யிப் பின் சியூ, தோ வெய் சூங், சோஃபி சூன், டிரோ நூர்தின், டேனியல் சான், லாரன்ஷியா டான், கெம்மா ஃபூ, ஹிலரி சு, ஜெரலின் டான், நூர் சியாஹிடா அலிம் ஆகியோர் ஊர்வலத்தில் இடம்பெற்றனர்.
இவ்வாண்டின் சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது. 2024ஆம் ஆண்டு விளையாட்டுகளில் இதுவரை இல்லாத வகையில் ஆகச் சிறப்பாகச் செயல்பட்டது சிங்கப்பூர்.

