பார்சிலோனா: அர்ஜெண்டினா காற்பந்துக் குழுத் தலைவரான லயனல் மெஸ்ஸி, பார்சிலோனா குழுவிற்காக 600 ஆட்டங்களில் விளையாடியோர் பட்டியலில் இணைந்தார். முன்னாள் ஸ்பெயின் வீரர் ஸாவி ஹெர்னாண்டஸ் (767 ஆட்டங்கள்), இப்போதைய பார்சிலோனா குழுத் தலைவர் ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா (642 ஆட்டங்கள்) ஆகியோரை அடுத்து அக்குழுவிற்காக 600 ஆட்டங்களில் பங்கேற்ற 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மெஸ்ஸி. செவிய்யா குழுவிற்கெதிராக நேற்றிரவு நடந்த ஆட்டமே பார்சிலோனாவுக்காக மெஸ்ஸியின் 600வது ஆட்டம்.
ஐந்து முறை உலகின் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை வென்றுள்ள மெஸ்ஸி, இதற்குமுன் ஆடிய 599 ஆட்டங்களில் 523 கோல்களை அடித்து, ஆக அதிக கோலடித்த பார்சிலோனா வீரராகத் திகழ்கிறார். அத்துடன், ஸ்பானிய லா லீகா போட்டிகளில் அதிக கோலடித்திருப்பதும் (360 கோல்கள்) அவர்தான். "ஒரே குழுவிற்காக 600 ஆட்டங்களில் விளையாடுவது என்பது மிக மிக அரிதான விஷயம்," என்று புகழ்ந்தார் பார்சிலோனா நிர்வாகி வல்வெர்டே.

