லீட்ஸ்: அடுத்த பருவ ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை செல்சி குழு கிட்டத்தட்ட உறுதிசெய்துள்ளது.
லீட்ஸ் யுனைடெட் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
லீட்ஸ் குழுவின் எலாண்ட் ரோடு விளையாட்டரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே செல்சியின் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் பிரிட்டிஷ் வீரரான மேசன் மவுன்ட். ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் டேனியல் ஜேம்ஸ் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது லீட்ஸ் குழுவிற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
பிற்பாதி ஆட்டத்தில் கிறிஸ்டியன் புலிசிச் 60வது நிமிடத்திலும் ரொமேலு லுக்காகு 83வது நிமிடத்திலும் கோலடித்தனர். கடந்த நான்கு ஆட்டங்களில் செல்சிக்குக் கிட்டிய முதல் வெற்றி இது.
இப்போது 70 புள்ளிகளுடன் செல்சி பட்டியலின் மூன்றாமிடத்தில் உள்ளது. ஆர்சனல் 66 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் அதைவிட நான்கு புள்ளிகள் குறைவாகப் பெற்று டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் ஐந்தாம் இடத்திலும் உள்ளன (இன்று அதிகாலை இவ்விரு குழுக்களும் மோதிய ஆட்டத்திற்கு முந்திய நிலவரம்).
இதனிடையே, செல்சியிடம் தோற்றதால் 18ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட லீட்ஸ் யுனைடெட், அடுத்த பருவ பிரிமியர் லீக்கில் நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
"முக்கிய ஆட்டங்களில் எல்லாம் அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம்," என்று ஆதங்கப்பட்டார் லீட்ஸ் நிர்வாகி ஜெஸி மார்ஸ்.
ஏற்கெனவே அடுத்த பருவ பிரிமியர் லீக்கில் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட வாட்ஃபர்ட் குழுவுடன் 0-0 எனச் சமநிலை கண்ட எவர்ட்டன் குழு, லீட்ஸ் குழுவைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்று 16ஆம் இடத்தில் இருக்கிறது.
ஜேமி வார்டி இரு கோல்களையும் ஜேம்ஸ் மேடிசன் ஒரு கோலையும் அடிக்க, லெஸ்டர் சிட்டி 3-0 என்ற கணக்கில் 20வது இடத்தில் உள்ள நார்விச் சிட்டியை வென்றது.

