தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘செல்லுமிடமெல்லாம் அன்பு’

2 mins read
ரசிகர்களின் பேராதரவால் நெகிழும் லிவர்பூல் காற்பந்து ஆட்டக்காரர்
722be33a-e991-45db-9231-535ae46cc56d
லிவர்பூல் வீரர்கள் சிமிகஸ், டியோகோ ஜோட்டா, விர்ஜில் வேன் டைக் ஆகியோரைச் சந்தித்து மகிழ்ந்த ரசிகர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தாங்கள் எங்கு சென்றாலும் ரசிகர்கள் காட்டும் அன்பு நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாகக் கூறுகிறார் லிவர்பூல் காற்பந்துக் குழுவின் டியோகோ ஜோட்டா.

அடுத்த காற்பந்துப் பருவத்திற்கு ஆயத்தமாகும் வகையில் முன்னணிக் காற்பந்துக் குழுக்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று நட்புமுறை ஆட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

அவ்வகையில், முன்னணி இங்கிலிஷ் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான லிவர்பூலும் சிங்கப்பூர் வந்துள்ளது.

சக இங்கிலிஷ் குழுவான லெஸ்டர் சிட்டியை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமையும் ஜெர்மானிய லீக் வெற்றியாளரான பயர்ன் மியூனிக்கை எதிர்த்து புதன்கிழமையும் நட்புமுறை ஆட்டங்களில் லிவர்பூல் விளையாடவிருக்கிறது.

இவ்விரு ஆட்டங்களும் தேசிய விளையாட்டரங்கில் இடம்பெறும்.

இந்நிலையில், லிவர்பூல் ஆட்டக்காரர்கள் சிலர் சனிக்கிழமை ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் ரசிகர்களைச் சந்தித்தனர்.

அப்போது, “எங்கு சென்றாலும் ரசிகர்களின் அன்பை உணர முடிகிறது. உலகின் இந்தப் பகுதியிலும் ரசிகர்கள் எங்கள்மீது அன்பு செலுத்துவது நம்ப முடியாத வகையில் உள்ளது,” என்றார் 26 வயது போர்ச்சுகீசியரான ஜோட்டா.

பலமணி நேரம் வித்தியாசம் இருந்தாலும் லிவர்பூல் குழு விளையாடும் ஆட்டங்களைத் தவறாது காணும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கடந்த பருவத்தில் ஐந்தாம் நிலையில் முடித்தது ஏமாற்றமளித்தாலும் 2023-24 பருவத்தில் லிவர்பூல் குழு மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அதன் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான வெர்ஜில் வேன் டைக்.

“சாம்பியன்ஸ் லீக்கில் நாங்கள் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே எல்லாரும் விரும்புவர். ஆனால், இம்முறை அவ்வாய்ப்பை இழந்து, யூரோப்பா லீக்கில் விளையாடவுள்ளோம். ஆயினும், எங்களால் முடிந்த அளவு முயன்று அக்கிண்ணத்தை வெல்லப் போராடுவோம்,” என்றார் அவர்.

லிவர்பூல் வீரர்களைக் காண நேரில் வந்திருந்தவர்களில் 51 வயது தினேஷ் மந்த்வானியும் ஒருவர். தமது 11 வயதிலிருந்து லிவர்பூல் ரசிகராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அப்போது முதல் முடிந்த அளவிற்கு லிவர்பூல் விளையாடும் எல்லா ஆட்டங்களைக் காண முயல்வதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்