படகோட்டத்தில் மூன்று பதக்கம்

1 mins read
கணவனும் மனைவியும் சேர்ந்து வெள்ளிப் பதக்கம் வென்றனர்
9827983f-a8f4-484c-8803-d05ef7956b1f
‘இல்கா 4’ பிரிவில் வெண்கலம் வென்ற கைரா கார்லைல் (இடது), வெள்ளி வென்ற ஐசக் கோ. - படம்: சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம்

ஹாங்ஜோ: சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் படகோட்டத்தில் தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடந்த ‘நாக்ரா 17’ பிரிவுப் போட்டியில் சிங்கப்பூரின் ஜஸ்டின் லியு - டெனிஸ் லிம் இணை வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இருவரும் கணவன்-மனைவி என்பதும் இணையராகப் பங்கேற்ற முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டி இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘இல்கா 4’ போட்டியின் இளையர் ஆண்கள் பிரிவில் ஐசக் கோ வெள்ளியையும் பெண்கள் பிரிவில் கைரா கார்லைல் வெண்கலத்தையும் அறுவடை செய்தனர்.

பதினாறு வயதான ஐசக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது இதுவே முதன்முறை. முன்னதாக, இவ்வாண்டு மே மாதம் கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் தங்கம் வென்றிருந்தார்.

அதுபோல், 17 வயதான் கைரா, 11வது, கடைசிப் பந்தயத்தில் முதலாவதாக வந்து, மொத்தம் 28 புள்ளிகளுடன் வெண்கலத்தைத் தனதாக்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரு பதக்கங்களை வென்றிருந்தது.

முன்னதாக, திங்கட்கிழமையன்று வுஷு தற்காப்புக் கலை வீராங்கனை கிம்பர்லி ஓங் சிங்கப்பூருக்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

குறிப்புச் சொற்கள்