தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13-0 கோல் கணக்கில் இந்தியா வெற்றி

2 mins read
530a2abf-3c2d-493c-a5af-7e8085c3a45b
ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூரைத் திக்குமுக்காட வைத்தது இந்தியா. - படம்: ஹாக்கி இந்தியா அமைப்பு

ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் ஹாக்கி போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் அசத்தியுள்ளது இந்தியா. சிங்கப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் 13-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்றது.

உதித்தா, சுஷிலா சானு புக்ராம்பம், தீபிகா, நவ்னீத் (2), தீப் கிரேஸ் எக்கா, நேஹா, சங்கீதா குமாரி (3), சாலிமா தெத்தெ, வந்தனா கத்தாரியா, மோனிகா ஆகியோர் இந்தியாவின் கோல்களைப் போட்டனர்.

இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து ‘ஏ’ பிரிவில் இந்தியா முதலிடத்துக்குச் சென்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் முடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

பெண்கள் ஹாக்கி உலகத் தரவரிசையில் இந்தியா ஏழாவது இடத்திலும் சிங்கப்பூர் 34வது இடத்திலும் இருக்கின்றன.

ஆட்டம் தொடங்கி ஐந்து நிமிடங்களில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சாதகமாக்கி கோலாக்கினார் உதித்தா.

அந்தப் பின்னடைவிலிருந்து சிங்கப்பூர் மீள்வதற்குள் இந்தியா அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் போட்டது. சுஷிலா சானு புக்ராம்பம், தீபிகா இருவரும் கோல் போட்டனர்.

முதல் காலாட்டாம் நிறைவுறும் வேளையில் நவ்னீத் கோர் மேலும் இரண்டு கோல்களைப் போட்டார். ஐந்து கோல் வித்தியாசத்தில் இந்தியா முன்னணி வகித்தது.

இரண்டாம் காலாட்டத்தில் தீப் கிரேஸ் எக்கா, நேஹா, சங்கீதா குமாரி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோல் போட்டனர். ஆட்டத்தின் பாதிக் கட்டத்தில் கோல் எண்ணிக்கை 8-0 ஆனது.

பிற்பாதியிலும் இந்தியா தொடர்ந்து அபாரமாக ஆடியது. சாலிமா தெத்தெ, சங்கீதா குமாரி, வந்தனா கத்தாரியா, மோனிகா ஆகியோர் மேலும் ஐந்து கோல்களைப் போட்டு கோல் எண்ணிக்கையை 13-0ஆக ஆக்கினர்.

அடுத்ததாக வெள்ளிக்கிழமையன்று இந்தியா, மலேசியாவுடன் மோதும்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் பெண்கள் ஹாக்கி அணி அடிக்கடி ஆசிய விளையாட்டுகளில் போட்டியிட்டு வருகிறது. 1982 ஆசிய விளையாட்டுகளில் இந்தியா தங்கம் வென்றது.

2018ஆம் ஆண்டு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற சென்ற ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

குறிப்புச் சொற்கள்