தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீரஜ் சோப்ராவுக்கு மீண்டும் தங்கம்

2 mins read
6b809a1a-6afd-4244-8fc1-66ebfeba2f5a
ஆசிய விளையாட்டுகளின் ஈட்டி எறிதலில் மீண்டும் தங்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

ஹாங்ஜோ: இவ்வாண்டு ஆசிய விளையாட்டுகளின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளது.

தங்கப் பதக்கத்தை வென்றார் இந்தியாவின் ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா. சென்ற ஆசிய விளையாட்டுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற இவர் இம்முறையும் வாகை சூடினார்.

88.88 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சோப்ரா தங்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் இந்தியாவின் கிஷோர் ஜெனா. இப்போட்டியில் ஒரு கட்டத்தில் ஜெனா முன்னணி வகித்தார்.

ஜெனா 87.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். இதுவரை இவர் இவ்வளவு தூரம் எறிந்ததில்லை.

வெண்கலப் பதக்கம், ஜப்பானின் ரோட்ரிக் ஜெங்கி டீன் எனும் வீரருக்குச் சென்றது.

முன்னதாக பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டி சர்ச்சைக்குரிய முறையில் தொடங்கியது. சோப்ரா முதலில் எறிந்த தூரம் கணக்கிடப்படவில்லை.

10 நிமிடங்களுக்கு மேல் முடிவு வரவில்லை என்று சில தகவல்கள் தெரிவித்தன. அதற்குப் பிறகு மீண்டும் ஈட்டி எறியவேண்டியிருந்தது.

பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷாத் நடீமுக்கும் சோப்ராவுக்கும் இடையே விறுவிறுப்பான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காயமுற்றதால் அர்ஷாத் நடீம் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள நேரிட்டது.

2021ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றார் சோப்ரா. அதுவே ஒலிம்பிக் விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம்.

குறிப்புச் சொற்கள்